தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் பத்திரிகையாளர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவித்ததோடு பத்திரிகையாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு 10 லட்சம் அரசு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி இறந்த செய்தியாளர் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் அரசின் நிவாரண உதவி வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சியான புதியதலைமுறை தொலைக்காட்சியின் கோபிசெட்டிபாளையம் செய்தியாளர் சந்திரசேகர் என்பவர் கரோனா வைரஸ் ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்தார். அதன் தொடர்ச்சியாக 28 ந் தேதி மாலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறந்த சந்திரசேகரின் குடும்பத்தினரிடம் அமைச்சர் சு.முத்துச்சாமி, மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி, ஆகியோர் 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.வாரிய தலைவர் குறிஞ்சி சிவக்குமார் உடனிருந்தார்.