கிராமங்களில் பொதுவாக அடுத்தவர் பொருளை அபகரிப்பவர்களை மலை முழுங்கி மகாதேவன் என்பார்கள் ஆனால் உண்மையிலேயே ஒரு ஊரில் மலை முழுங்கி மகாதேவன் என்று அடைமொழியோடு கூறப்படும் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டுள்ளது. இதனால் அந்த ஊர் மக்கள் மட்டுமல்ல சுற்றுப்புற கிராம மக்கள் பயத்தில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது புது கேணி புதுகிராமம். இந்த ஊரில் 10 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக உளுந்தூர்பேட்டை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து அப்பகுதியிலுள்ள வரஞ்சரம் காப்புக் காட்டில் கொண்டுபோய் விட்டுள்ளனர். இதுபற்றி கிராம மக்களிடம் நாம்கேட்டபோது இதுவரை எங்கள் பகுதியில் இதுபோன்ற பாம்புகள் நடமாடியது இல்லை. இதுவே முதல் முறை பொதுவாக மலைப்பாம்பு ஆடுகள், அதன் குட்டிகள், பசு கன்றுகள் ஆகியவற்றை விழுங்க கூடியவை.
இப்போது எங்கள் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு வயல்வெளிகளுக்கு ஓட்டி செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். காரணம் இந்த பாம்பு மனிதர்களை கூட தன் வாலால் முதலில் வளைத்து சுருட்டிக்கொண்டு பிறகு விழுங்க கூடியது. இது அவ்வளவு பெரிய பாம்பு இல்லாவிட்டாலும் கூட இந்தப் பகுதியில் இதைவிட பெரிய மலைப்பாம்பு இருக்கின்றது. அது குட்டிகளை ஈன்று இருக்கலாம்.
அதனால் இப்போது பிடிபட்டுள்ள மலைப்பாம்பு போல இன்னும் பல பாம்புகள் எங்கள் பகுதியில் இருக்கலாம். எனவே வனத்துறை அதிகாரிகள் தேடி அவைகளை கண்டுபிடித்து அதிக காடுகள் உள்ள பகுதியில் கொண்டு போய் விட வேண்டும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். ஆனால் உண்மையிலேயே இது போன்ற பாம்புகள் இன்னும் பல இருக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் வனத்துறையை சேர்ந்த சிலர். இந்த மலைப்பாம்பு பிடிபட்ட பிறகு அப்பகுதி மக்கள் வயல்வெளி வேலைக்கும் ஆடுகள் மாடுகள் மேய்ப்பதற்கும் காட்டுப்பகுதிக்கு செல்வதற்கு அச்சப்பட்டு முடங்கி கிடக்கின்றனர்.