தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்துள்ள பாறசாலை பகுதியைச் சேர்ந்த ஷாரோன் என்ற இளைஞருக்கு களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் சிறைப்பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா என்ற இளம்பெண் விஷம் கொடுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிரீஷ்மா, கிறுகிறுக்கும் அளவுக்குப் பல ரகசிய உண்மைகளைக் கொட்டினார்.
“நானும் அவனும் காதலித்தது உண்மைதான். ஆனால் எனக்கு வேறொருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டது. இதனால் ஷாரோனை கூப்பிட்டு நாங்கள் தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அழித்துவிடும்படிக் கூறினேன். அதற்கு அவன் மறுப்பு தெரிவித்தான். மேலும், நாம் கல்யாணம் செய்து கொள்ளலாம் எனத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தான்.
இந்தக் காதலும் நாங்கள் எடுத்துக்கொண்ட போட்டோவும் வெளியே தெரிந்தால் எனது எதிர்காலம் பாழாகிவிடுமே எனும் அச்சத்தில் அவனைக் கொலை செய்ய முடிவெடுத்தேன். மெல்லக் கொல்லும் விஷத்தின் வகைகள் மற்றும் போலீசில் மாட்டிக்கொண்டால் தப்பிப்பது எப்படி என்பது பற்றி கூகுளில் தேடிக் கண்டுபிடித்தேன். அதன்படி வீட்டுக்கு வரவழைத்து கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்தேன்” என கிரீஷ்மா போலீசுக்கு பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, இளம்பெண்ணின் செயலைக் கண்டித்து அவரது வீட்டின் மீது கல் எறிந்து சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த பரபரப்புக்கு மத்தியில் கொலைச் சம்பவம் குறித்து நடித்துக் காட்ட, போலீசார் கிரீஷ்மாவை அவரது வீட்டிற்கு கடந்த 7 ஆம் தேதி அழைத்துச் சென்றனர். கொலைச் சம்பவத்திற்குப் பிறகு முதல்முறையாக சிறையிலிருந்து அவரது வீட்டிற்குச் சென்ற கிரீஷ்மா மன வேதனையுடன் காணப்பட்டார். பின்னர் வீட்டுக்குள்ளே சென்ற கிரீஷ்மா தான் படித்த காலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வாங்கிய கோப்பைகளைப் பார்த்துக் கதறி அழுதார். தப்பு பண்ணிட்டேன் எனக் கண்ணீர் விட்டு அழுததாகக் கூறப்படுகிறது. மேலும், போலீசார் முன்னிலையில் ஷாரோனுக்கு விஷம் கொடுத்தது எப்படி என்பது போன்று நடித்துக் காட்டிய பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தற்பொழுது இந்த வழக்கில் மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கிரீஷ்மா தனது காதலன் ஷாரோனை கொலை செய்ய கிட்டத்தட்ட 10 முறை முயன்றதாகவும், பலமுறை குளிர்பானத்தில் காய்ச்சல் மருந்துகளை அதிக அளவில் கலந்து கொடுத்து கொல்ல முயற்சித்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் கிரீஷ்மாவின் தாயார் சிந்து, தாய்மாமன் நிர்மல்குமார் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.