சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கோவிந்தசாமி தெரு- கதிர்வேல் நகர் சந்திப்பில் 201 என்ற எண்கொண்ட ரயில்வே கேட் உள்ளது. விழுப்புரம்- மயிலாடுதுறை மீட்டர்கேஜ் ரயில் பாதையாக இருந்தபோது இந்த ரயில்வே கேட் அருகே கேட்டை மூடுவதற்கும், திறப்பதற்கும் ஷெட்(கொட்டா) அமைக்கப்பட்டது. பின்னர் இருப்பு பாதை அகலபாதையாக மாற்றிய பிறகு அந்த ஷெட் அகற்றப்படாமல் அப்படியே இருந்தது.
இந்த ஷெட்டில் இரவு மற்றும் பகல் நேரங்களில் சில குடிகாரர்கள் மற்றும் சமூக விரோதிகள் பகல் இரவு பாராமல் குடி குடிப்பது, சிகரெட் பற்றவைத்து போடுவது போன்ற சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் அந்த வழியாக தனியாக செல்லும் பெண்களை கிண்டல் செய்து பேசி வந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள மக்கள் இந்த ஷெட் எந்த பயன்பாடும் இல்லாமல் உள்ளது. இதனால் இங்கு இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இதனை அப்புறப்படுத்துங்கள் என்று ரயில்வே துறையினரிடம் கூறினார்கள். ஆனால் ரயில்வே நிர்வாகம் இதுப்பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் ஞாயிறுற்றுகிழமை மதியம் சிலர் அந்த இடத்தில் உட்கார்ந்து குடிகுடித்து விட்டு சிகரெட் துண்டை ஷட்டுக்கு கீழே உள்ள குப்பைகளில் போட்டுள்ளனர். சிகரெட் துண்டு கனிந்து குப்பைகள் முழுவதும் எரிந்து ரயில்வே கேட்கீப்பர் ஷெட்டும் எரிந்தது.
இதுகுறித்து அப்பகுதியில் உள்ள மக்கள் பதற்றத்துடன் எரியும் இடத்தில் இருந்து 5 மீட்டர் தொலைவில் பணியில் இருந்த ரயில்வே கேட் கீப்பரிடம் கூறியுள்ளனர். அவர் எந்த பதற்றமும் இல்லாமல் தனிநபர் யாரோ கொளுத்தியுள்ளனர் என்று கூறிவிட்டு ரயில்வே அதிகாரிகளுக்கு இது குறித்து எந்த தகவலும் கொடுக்காமல் இருந்துள்ளார்.
ரயில் பாதைக்கும் தீ எரிந்து கொண்டு இருந்த இடத்திற்கும் 5 அடி தூரத்தில் உள்ள ரயில் பாதையில் காரைகாலில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் சென்றது.
இந்த விபரிதத்தை அறிந்த அந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் அந்த வழியாக செய்தியாளர் ஒருவர் தீயணைப்பு துறைக்கும் சிதம்பரம் ரயில்வே மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்தனர். இன்னும் அரைமணி நேரம் தாமதமாக தகவல் வந்திருந்தால் அருகில் உள்ள 20க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும் என்று தீயனைப்பு ஊழியர்கள் கூறிசென்றனர். இதுபோன்ற நேரங்களில் எப்படி செயல்படவேண்டும் என்று ஊழியர்களுக்கு சரியான வழிகாட்டுதல் பயிற்சி இல்லாததால் சிறிய விபத்தும் பெரிய விபத்தாக மாறும் வாய்ப்பு ஏற்படும் சமூக ஆர்வலர்கள் கூறினார்கள்.