பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, "சசிகலா விடுதலையில் சிறப்பு சலுகை கிடையாது. நீதிமன்ற தீர்ப்பின்படியும் சிறைச்சாலை விதியின் படியும் மட்டுமே சசிகலா விடுதலை செய்யப்படுவார்" என்றார்.
சிறையில் உள்ள சசிகலாவுக்கு 129 நாட்கள் சிறைவிடுப்பு இருப்பதால், அவர் முன்கூட்டியே விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியானது. அதேபோல், நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் சசிகலாவை விடுவிக்க அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் கோரியிருந்தார். இந்த நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் சசிகலா அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதியில்தான் விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல் கூறுகின்றன.
அபராதத் தொகை செலுத்தப்பட்ட நிலையில் சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய அவரது தரப்பு கர்நாடக சிறைத்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.