நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அண்மையில் ஆளுநர் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதற்கான தமிழக அரசின் மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ளதை அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''இந்த நேரத்தில் நடைபெறுகின்ற இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். திமுக எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைப்பார்கள். வாக்களித்த மக்களை அதோடு மறந்துவிடுவார்கள். கடந்த தேர்தலை எண்ணிப்பாருங்கள். கலைஞர் தேர்தலின்போது நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார். எங்கே நிலத்தைக் காண்பித்தார். சுடுகாட்டு நிலத்தைக் கூட திமுக காரர்கள் பட்டா போட்டுக் கொண்டதுதான் மிச்சம்.
அதிமுக ஆட்சியிலிருந்தபொழுது தொடங்கிவைத்த திட்டங்களை தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார். 2021 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று, ஏன்பா ரத்து செய்யல. உதயநிதி ஸ்டாலின் சொன்னார் எங்களுக்கு ரகசியம் இருக்கிறது என்றார். அது என்னதான் ரகசியம் சொல்லு... எதுக்கு எங்களை கூப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்குதான் ரகசியமே தெரியுமல்லவா... நீங்கதான் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னீர்களே... எங்களிடம் அந்த ரகசியம் இருக்கிறது என்று சொல்கிறீர்களே.. அந்த ரகசியத்தின் மூலமாக நீட் தேர்வை ரத்து செய்யுங்கள். பேசுவது அனைத்தும் பொய். எல்லா குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் கொடுப்போம் என்றார்கள். நம்ம மக்களும் மாதம் ஆயிரம் ரூபாய் 12 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் என்று எண்ணி திமுகவிற்கு ஓட்டுப் போட்டதால் இன்னைக்கு ஸ்டாலின் முதல்வர் ஆகி விட்டார். ஓட்டுபோட்ட மக்களை அதோடு மறந்து விட்டார். அந்தத் திட்டமும் கோவிந்தா...'' என்றார்.