பல்வேறு அரசியல் கட்சிகளில் பயணப்பட்டு தற்போது மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார் பழ.கருப்பையா. இவரது பேச்சுக்கும் குரலுக்கும் பெரும் ரசிகர் கூட்டம் தமிழகத்தில் உள்ளது. அதேவேளையில், வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு மாறுவது இவர் மீதான பெரும் குற்றச்சாட்டாக இருக்கிறது. தற்போது, சில மாதங்களாகவே கமலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவந்தார். இந்தநிலையில், இன்று மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து, மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ், 'நக்கீரன்' இணையதளத்திடம் பேசுகையில்,
பழ.கருப்பையா பல்வேறு அரசியல் கட்சிகளில் மாறிமாறி பயணப்பட்டவர். தற்போது மக்கள் நீதி மய்யத்தில் இணைந்திருக்கிறார். இங்கு எத்தனை நாட்கள் இருப்பார் எனத் தெரியவில்லை எனச் சிலர் சொல்லுகிறார்களே?
“பல கட்சியில் இருந்தவர் என்பதை ப்ளஸ்ஸாகவும் மைனஸ்ஸாகவும் பார்க்கலாம். எங்கேயும் இவரை அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. காரணம், இவர் சில விஷயங்களை விட்டுக்கொடுக்கமாட்டார். வேறு சில பொதுவான காரணங்களால் இது பெட்டராக இருக்கும் என மாறியிருப்பார். ஆனால், அவர் அன்றிலிருந்து இன்று வரை பேசியது ஒரே விஷயமாகத்தான் இருக்கும். யாரை ஆதரிக்க வேண்டும் என மாறியிருக்குமே தவிர, ஜனதா, காங்கிரஸ், திமுக, அதிமுக என எங்கும் அவர் பேச்சு தமிழ், திராவிடம், ஊழலற்ற நிர்வாகம் என ஒன்றாகவே இருக்கும்.
தற்போது இறுதியாக அதிமுகவிலிருந்து வெளிவந்ததும் கலைஞர் கூப்பிட்டார் என்பது அனைவருக்கும் தெரியும், அங்கு போய்விட்டு வந்துவிட்டார். அவரால் அங்கு இருக்க முடியவில்லை. இங்கேயும்கூட அவர் அப்படித்தான் இருப்பார். அது அவரின் சுபாவம். அவர் பேச்சுக்கு, கருத்துக்கு சௌகரியமான இடம் இதுதான். எல்லாக் கட்சியிலிருந்தும் சம்பாரித்துவந்த மனுஷன் அவர் கிடையாது. 1980-ல், எந்த வீட்டில் தங்கியிருந்தாரோ அதேவீட்டில்தான் தற்போதும் வசித்துவருகிறார். நான் கண்கூடாகவே பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.