தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா, திருச்சி ஜெ.ஜெ., பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய, 6 மாவட்டங்களை சேர்ந்த, 496 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினார்.
விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கேட்டையன் பேசியபோது, “ஏழைக் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பற்காக, 'பிச்சை எடுத்தாவது சத்துணவுத் திட்டத்தை நிறைவேற்றுவேன்' என்று கூறியவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலம் முழுவதுமே மக்களுக்காக வாழ்ந்தார். அனைத்து மக்களுக்கான நல்லாட்சியை வழங்கினார். இதைக் குறிப்பிட்டுச் சொல்ல காரணம், அவரைப் பற்றி இன்றைக்கு நிறைய பேருக்கு தெரியாது” என்றார்.
எம்.ஜி.ஆர் ஆட்சியைத் தருவதாக ரஜினி, கமல் உள்ளிட்டோர் கூறி வரும் நிலையில், அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக செங்கோட்டையன் சூசகமாக இப்படி பேசினார் என்று அக்கட்சி தொண்டர்களும் அங்கிருந்தவர்களும் பேசிக்கொண்டனர்.
மேலும், “பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் தரும் காலக்கெடுவை, 3 ஆண்டுகளில் இருந்து, 5 ஆண்டுகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். நிரந்தர அங்கீகாரத்தைத் தரவும் அரசு தயாராக இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்விப் பாடத்திட்டம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு எழுதுவோருக்கும் (சிவில் சர்வீஸ்) பயனளிக்கும் வகையில் உள்ளது" என்றார்.
ரஜினி, கமல் ஆகியோர் எம்.ஜி.ஆர். குறித்து தொடர்ந்து பேசி வருவது குறித்து பல்வேறு வகையிலான கேள்விகளாக அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் எழுப்பினர்.
அதற்கு அமைச்சர் செங்கோட்டையன், “அவர்களுக்கு பதில் சொல்வதற்காகவே மீன் வளத்துறை அமைச்சர் இருக்கிறார். அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார்.