தமிழகத்தில் எதிர்க்கட்சியாக செயல்படுவது பாமகதான் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஒரு சுமுகமான உறவு இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிர்வாகம் சீராக இருக்கும். யார் பக்கமும் ஈகோ இருக்கக்கூடாது. பாஜக இந்தியாவிலேயே பெரிய கட்சி. ஆனால் தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் ஒரு சிறிய கட்சி . நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றியில் 80 சதவிகிதம் கன்னியாகுமரியில் கிடைத்துள்ளது. ஏனென்றால் கன்னியாகுமரியில் தேசிய அரசியல்தான் எப்பொழுதும். அங்கு பாஜக-காங்கிரஸ் இடையேதான் எப்பொழுதும் போட்டி. திமுக, அதிமுக மற்ற கட்சிகள் அங்கு போட்டியில் இருக்காது. அடுத்து தென்காசியில் 10 சதவிகித இடங்களைப் பெற்றுள்ளது. அதுவும் கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள மாவட்டம். மீதம் உள்ள 10 சதவீதம்தான் தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற்றுள்ளார்கள். இது நகர்ப்புற தேர்தலில் அவர்கள் பெற்ற இடம். ஊரக தேர்தலில் இந்த இடம்கூட அவர்களுக்கு கிடையாது. ஆனால் உண்மையான எதிர்க்கட்சி நாங்கள்தான். அண்ணாமலை மேகதாது விவகாரம் பற்றி கர்நாடகாவில் போராடுவாரா? நாங்கள் போராடி இருக்கிறோம். 1000 வாகனங்களை எடுத்துக்கொண்டு எல்லைவரை சென்று ராமதாஸ் போராடியுள்ளார். மேகதாது அணை தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய சாபக்கேடு. அதை கட்ட விடமாட்டோம். நங்கள் போராடுவோம். எந்த எல்லைக்கும் சென்று போராட தயாராக இருக்கிறோம். கர்நாடகாவில் பாஜக ஆட்சி, மத்தியிலும் பாஜக ஆட்சிதானே நடக்கிறது அவர்கள் இப்படிப் போராடுவார்களா?'' என்றார்.