பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்ற பிரதமரின் பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. திமுகவும் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பொது சிவில் சட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு திமுக கடிதம் கொடுத்துள்ளது.
அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இது குறித்து தெரிவிக்கையில், “வெளிப்படையாக பார்த்தால் குடும்பத்தையும் நாட்டையும் குறித்த பிரதமரின் ஒப்பீடு உண்மை போல் தோன்றும். ஆனால் எதார்த்தத்தில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. ஒரு குடும்பம் என்பது ரத்த உறவுகளால் பிணைக்கப்பட்டது. ஆனால் அரசியல் சட்ட சான்றாவணம் என்ற அரசியலமைப்பால் நாடு இணைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் கூட வேற்றுமைகள் உண்டு. மக்களுக்குள் உள்ள பன்முகத்தன்மையையும் வேற்றுமையையும் அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ளது. பொது சிவில் சட்டம் என்பது ஒரு விருப்பம். ஆனால் அதை மக்களிடம் திணிக்க முடியாது. நிர்வாகத்தில் தோல்வி அடைந்த அரசு, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது” எனக் கூறியிருந்தார்.
தொடர்ந்து பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவரக்கூடாது என மத்திய நிலைக்குழுவிற்கு திமுக மூத்த வழக்கறிஞரும், எம்.பியுமான வில்சன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். ஆழமான மத நம்பிக்கைகள் பற்றி கவனமாகக் கையாள வேண்டும். மாநில அரசின் உரிமைகளை பறிக்கக்கூடிய பொது சிவில் சட்டத்தால் இந்தியாவில் மதச்சார்பின்மை பாதிக்கப்படும்‘ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.