Skip to main content

அதிமுக சீனியர்கள் எடுத்த முடிவு... கூட்டணி கட்சிகள் கடும் அதிர்ச்சி...

Published on 04/11/2019 | Edited on 04/11/2019

 

அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வருகிற 6ம் தேதி நடைபெற உள்ளது. கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை  முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகிக்கிறார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கிறார்.

 

eps-ops


 

நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சித் தேர்தலை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்ததாலும், முழுக்க முழுக்க இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிட்டதாலும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் பதவி உள்ளிட்ட சில பதவிகளை குறிவைத்து அதிமுக தலைமையை வலியுறுத்த தயாராக உள்ளது. அதிலும் கோவை, சென்னை உள்ளிட்ட மேயர் பதவியை கேட்டு இப்போதே பாஜக, அதிமுகவிடம் வலியுறுத்தி வருகிறதாம். 


 

இந்த நிலையில் 6ஆம் தேதி நடக்க இருக்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதால் அதே உற்சாகத்துடன் உள்ளாட்சித் தேர்தலையும் சந்திக்க வேண்டும் என்று அதிமுக தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு சில அறிவுறுத்தல்களை சொல்ல உள்ளது என்று கூறப்படுகிறது. 
 

இந்தக் கூட்டத்தில் அதிமுகவினரே முழுக்க முழுக்க மேயர் பதவிக்கு போட்டியிட வேண்டும். சட்டமன்றத் தேர்தலின்போது கூட்டணியில் உள்ள கட்சிகள் நம்முடனேயே கூட்டணியை தொடருவார்களா? பிரிந்து போவார்களா? என்று நமக்கு தெரியாது. ஆகையால் மேயர் பதவிகளில் அதிமுகவே போட்டியிட வேண்டும். கட்சி சின்னத்தில் போட்டியிடக்கூடிய அனைத்து பதவிகளிலும் அதிமுக வேட்பாளரே நேரடியாக போட்டியிட வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் தலைமையை வலியுறுத்த உள்ளார்களாம். மேயர் பதவி உள்ளிட்ட சில பதவிகளில் முழுக்க முழுக்க அதிமுகவே போட்டியிட வேண்டும் என்று அதிமுக சீனியர்கள் வலியுறுத்துவதால் கூட்டணி கட்சிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளன. 


 

மேலும், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் மேயர் பதவியை கேட்க உள்ளார்களாம். ராஜ்யசபா சீட் வழங்கப்படவில்லை என்ற கோபம் அதிமுகவின் முக்கிய சீனியர்கள் பலருக்கு உள்ளது. அவர்கள் தங்களுக்கு மேயர் பதவி வழங்க வேண்டும் என்று இப்போதே காய் நகர்த்தி வருகிறார்கள். 
 

கட்சி நிர்வாகிகள் இப்படி வலியுறுத்தப்போவது தெரிந்துதான் 7ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் வெளிநாடு செல்லும் முன்பு இந்தக் கூட்டத்தை வைத்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வெளிநாட்டு பயணம் முடிந்து திரும்பியதும் மேலும் விரிவாக இதுகுறித்து விவாதிக்கலாம் என்றும், அதுவரை ஒற்றுமையாக இப்போதே உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தொடங்கி பாருங்கள் என்றும் அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்ப முடிவு செய்துள்ளாராம்.  


 

சார்ந்த செய்திகள்