வரும் மே 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி, திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் திறப்புவிழாவை புறக்கணிக்கின்றன.
குடியரசுத் தலைவர் தான் நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்ற மரபை மீறி பிரதமர் திறந்து வைக்க இருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர் எதிர்க்கட்சியினர்.
இந்தநிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கலந்துகொள்ள வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்பொழுது பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ''திருவாடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட செங்கோல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நிறுவப்பட உள்ளது. நீதியோடு ஆட்சி நடத்த வேண்டும் என்பதை செங்கோல் நிலைநிறுத்தும். செங்கோல் நிறுவப்பட இருப்பது தமிழகத்திற்கு கவுரவமான விஷயம். எந்த மத அடையாளத்தைச் சார்ந்தும் செங்கோல் வைக்கப்படவில்லை. மக்களுக்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்'' என்றார்.
நாடாளுமன்றக் கட்டடத்தை மரபை மீறி பிரதமர் திறந்து வைப்பதாகவும் குடியரசுத் தலைவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பது தொடர்பாகவும் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “குடியரசுத் தலைவர் ரப்பர் ஸ்டாம்ப் பதவியில் இல்லை. குடியரசுத் தலைவர் தேர்தலின் போது அவருக்கு எதிராக ஒருவரை நிற்க வைத்தனர். தேர்தல் பரப்புரையின் போது அவரை அவமதிப்பு செய்தவர்கள் தான் தற்பொழுது அவருக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். பிரதமர் மோடி உட்பட நாங்கள் அனைவரும் குடியரசுத் தலைவருக்கு மரியாதை அளிக்கிறோம். அவரை நினைத்து எப்பொழுதும் பெருமைப்படுவோம். சத்தீஸ்கரில் சட்டப்பேரவை கட்டடத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.