
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொத்தம் எட்டு சட்டமன்றத் தொகுதிகளில், அ.தி.மு.க வேட்பாளர்கள் ஈரோடு மேற்கு, கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர், பவானிசாகர், பெருந்துறை ஆகிய ஆறு தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். ஈரோடு கிழக்குத் தொகுதி கூட்டணிக் கட்சியான த.மா.கா.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தி.மு.க.வை பொறுத்தவரை ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் ஈரோடு கிழக்குத் தொகுதியிலும், பவானிசாகர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், பெருந்துறை தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. கொ.ம.தே.க., தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
ஈரோடு மேற்கில் அ.தி.மு.க. திமுக நேரடி களம் காண்கிறது.
ஈரோடு மேற்கில் அதிமுக சார்பில் கே.வி.ராமலிங்கமும் தி.மு.க.சார்பில் சு.முத்துச்சாமியும் போட்டியிடுகின்றனர்.
பவானி தொகுதியில் அ.தி.மு.க., திமுக நேரடியாகக் களம் காண்கிறது. இத்தொகுதி அதிமுக சார்பில் கே.சி.கருப்பணனும், தி.மு.க. சார்பில் துரையும் போட்டியிடுகிறார்கள்.
அந்தியூர் தொகுதியில் அதிமுக, திமுக நேரடியாகக் களம் காண்கிறது. அ.தி.மு.க. சார்பில் சண்முகவேலும், தி.மு.க. சார்பில் ஏ.ஜி.வெங்கடாஜலமும் போட்டியிடுகிறார்கள்.
கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. நேரடியாகக் களம் காண்கிறது. அதிமுக சார்பில் செங்கோட்டையனும், தி.மு.க. சார்பில் மணிமாறனும் போட்டியிடுகின்றனர்.
பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. நேரடியாகக் களம் காண்கிறது. அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமாரும், தி.மு.க. சார்பில் 'உதயசூரியன்' சின்னத்தில் கொ.ம.தே.க.பாலுவும் போட்டியிடுகின்றனர்.
மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க., பா.ஜ.க. களம் காண்கிறது. திமுக சார்பில் சுப்புலட்சுமி ஜெகதீசனும், பா.ஜ.க. சார்பில் அநேகமாக அண்ணாதுரையும் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் த.மா.கா., காங்கிரஸ் கட்சிகள் களம் காண்கின்றன. த.மா.கா. யுவராஜுவும், காங்கிரஸ் திருமகன் ஈ.வே.ரா.வும் போட்டியிடுகின்றனர்.
பவானிசாகர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக களம் காண்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுந்தரமும், அ.தி.மு.க.சார்பில் பன்னாரி என்பவரும் வேட்பாளர்களாகக் களத்தில் இறங்குகிறார்கள்.
தி.மு.க. அ.தி.மு.க. நேரடியாக ஐந்து தொகுதிகளில் களம் இறங்குகிறது. இதனால் ஈரோடு மாவட்ட அரசியல் களம் தேர்தல் போட்டியில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.