எடப்பாடி பழனிசாமி மருத்துவர்களுக்காகப் பேசுகிறாரா அல்லது எடுத்த நடவடிக்கை தவறு எனச் சொல்லுகிறாரா என அவரை கேட்டுச் சொல்லுங்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரியாவின் மரணத்திற்கு யாரை குறை சோல்ல வேண்டும். எடப்பாடி பழனிசாமியை கேளுங்கள். அறுவை சிகிச்சை செய்தது இரண்டு மருத்துவர்கள். இரு மருத்துவர்களின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவினால் பிரியா உயிருடன் இருந்தபோதே இடமாற்றம் செய்யப்பட்டார்கள். பிரியா இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.
அதோடு மட்டுமின்றி, துறையின் சார்பில் ஒழுங்கு நடவடிக்கைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர எடப்பாடி பழனிசாமி மருத்துவர்களுக்காகப் பேசுகிறாரா அல்லது எடுத்த நடவடிக்கை தவறு எனச் சொல்லுகிறாரா என அவரை கேட்டுச் சொல்லுங்கள்.
யார் மீது குற்றம் சாட்டுகிறார்? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். அறுவை சிகிச்சையில் சம்பந்தப்பட்ட 2 மருத்துவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதுகுறித்து காவல்துறை முடிவு எடுத்து நடவடிக்கை மேற்கொள்ளும்.” எனக் கூறினார்.