தமிழக பாஜகவில் இருந்து கடந்த சில நாட்களாக பலர் விலகி எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார், ஐ.டி. விங் செயலாளர் திலிப் கண்ணன், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதி ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இது பாஜகவினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக ஒரு எதிர்வினை உண்டு என்று அதிமுகவினரை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற கோவில்பட்டி பாஜகவினர் கூட்டணி தர்மத்தை மீறியதாக, எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று கூறி அவரது புகைப்படத்தை எரித்தனர்.
இது தொடர்பாக பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை எரித்தது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை அக்கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றதோடு, நீங்கள் இப்படி செய்கிறீர்கள், இதைப் பார்த்து எங்கள் கட்சியில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் கிளர்ந்து எழுத்தால் உங்களால் ஈடுகொடுக்க முடியாது என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் அதிமுகவினர் அண்ணாமலையின் உருவப்படத்தை எரித்துள்ளனர். சமீபத்தில் பேசிய அண்ணாமலை, தன்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். ஜெயலலிதாவுடன் எப்படி ஒப்பிட்டு பேசுவது என்று கூறி அண்ணாமலையின் உருவப்படத்தை அதிமுக தொண்டர்கள் எரித்துள்ளனர். இதையடுத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.