Skip to main content

திமுக மூத்த தலைவர்களை மொய்க்கும் எம்.எல்.ஏக்கள்

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

Who all will be get chance DMK Ministry


நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்றுள்ளது. எதிர்க்கட்சியாக அதிமுக சட்டமன்றத்தில் நுழைகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என அக்கட்சியினர் நம்பியிருந்த நிலையில், தற்போது திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. 

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்தே தேர்தல் களம் அனல் பறக்கத் துவங்கியது. அதேபோல், இரு கட்சியினரும் தங்களது பெயர்கள் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறுமா என பெரும் ஆவலுடன் காத்திருந்தனர். குறிப்பாக, திமுகவில் இந்த ஆவல் அதிகமாகவே இருந்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், வேட்பாளர்கள் பட்டியலை வாசிக்கும் அந்த நிமிடம்வரை பல கருத்துகள் திமுக தொண்டர்களிடையே பரவியது. 

 

திமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுத்த ஐபேக் டீம் ஒரு பட்டியலை தயார் செய்து ஸ்டாலினிடம் கொடுத்துள்ளது. அதன்படிதான் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனும் பேச்சுக்களும் வலம் வந்துகொண்டிருந்தன. அதேபோல், திமுகவினர் பலர் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களிடம், தங்களது பெயரை சிபாரிசு செய்யும்படியும் கேட்டு வந்தனர். “வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் மிக ரகசியமாக வைத்துள்ளார். அது வெளியாகும்போதுதான் அனைவருக்கும் யார் யாரின் பெயர்கள் இருக்கின்றன என்பதே தெரியும், பொறுத்திருந்து பார்ப்போம்” என தங்களை கேட்டு வந்த கட்சியினரிடம் திமுக மூத்தத் தலைவர்கள் தெரிவித்தனர். 

 

திமுகவின் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, அவரே ஒவ்வொரு வேட்பாளர்கள் பெயரையும் படித்தார். அதில் பெரும்பாலும் ஏற்கனவே போட்டியிட்டவர்கள் பெயர்கள் அடங்கியிருந்தன. ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் முடிவடைந்தவுடன், சமூகவலைதளங்களில் திமுக அமைச்சரவை பட்டியல் என்றொரு செய்தி வலம் வர ஆரம்பித்தது. ஆனால், அதில் இடம்பெற்றிருந்த சிலர், தேர்தலில் வெற்றி பெறவில்லை. இது இப்படி இருக்க, தேர்தல் முடிவுகள் வெளியானதும் மற்றொரு பட்டியல் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. அதனை பலர் பகிர்ந்தும் வருகின்றனர். 

 

திமுக இந்தத் தேர்தலில் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பானமையுடன் ஆட்சியை அமைக்கவிருக்கிறது. இதனை மேலும் வளர்க்கும் விதமாகவும், கட்சியை மேலும் பலப்படுத்தும் விதமாகவும் அமைச்சரவை பட்டியலை தயார் செய்து தன்னிடம் ரகசியமாக வைத்திருக்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். 

 

வேட்பாளர் பட்டியலை போலவே அமைச்சரவை பட்டியலையும் மு.க. ஸ்டாலினே வெளியிடுவார் என்றும் யார் யார் அமைச்சராகிறார்கள் என்பது அப்போதுதான் திமுகவினருக்கே தெரியவரும் என்றும் தங்கள் பெயர் இடம்பெற்றவர்கள் சந்தோஷ பெருமூச்சு விடுவர் என்றும் திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்