நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் வெற்றி பெற்றால் பிரதமர் பதவியில் மோடியே நீடிப்பாரா? அல்லது மாற்றப்படுவாரா? என்கிற ஆலோசனை ஆர்.எஸ்.எஸ். இயகத்தில் நடந்து வருவதாக டெல்லியிலிருந்து தகவல் கிடைக்கின்றன.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு அமோக வெற்றிக்கிடைப்பதாக வெளிவந்த தகவலில் பிரதமர் மோடியும், பாஜகவின் தேசிய தலைவர் அமீத்ஷாவும் உற்சாகமடைந்திருக்கின்றனர். இதனை தோழமைக் கட்சிகளுடன் பகிர்ந்துகொள்ளவும் , தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் தமது கூட்டணி கட்சிகளுக்கு இன்று மாலை டெல்லியில் விருந்தளிக்கிறார் அமீத்சா.
இதில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓபிஎஸ்சும் டெல்லிக்கு விரைந்துள்ளனர். இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச்செயலர் பையாஜி ஜோஷியை இன்று நேரில் சந்தித்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்தாலும் அல்லது பாஜக கூட்டணி பலத்தில் தனிப்பெரும்பான்மை கிடைத்தாலும் புதிய பிரதமராக நிதின் கட்கரியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் திட்டமிடுவதாக சமீபகாலமாக தகவல்கள் கசிந்தபடி இருந்தன.
இந்த சூழலில், நிதின் கட்கரியை அழைத்து பையாஜி ஜோஷி விவாதித்திருப்பது பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டிருக்கின்றன. இவர்களின் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.