தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர் எம்.கே. விஷ்ணு பிரசாத் சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில், முதல்வர் எடப்பாடி அரசின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி. , ‘’ தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி பதவியேற்றபின் தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களையும், சாதனைகளையும் செய்திருப்பதாக ஊடகங்களில் விளம்பரப்படுத்தி வருகிறார். ஜெயலலிதாவின் சாதனைகளை முறியடித்து விட்டேன் என்பது போல தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு வருகிறார். இது அனைத்தும் வெறும் மாய ஜாலம் தான்.
கடந்த 2019, பிப்ரவரி மாதம் 11ம் தேதி சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தில் 110-விதியின் கீழ் ஒரு அறிவிப்பை வெளியிட்ட முதல்வர், ‘கஜா’ புயல் தாக்கத்தினாலும் பருவ மழை பொய்ததின் காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதிலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் கிராமப்புறத்திலுள்ள சுமார் 35 லட்சம் ஏழை குடும்பங்களுக்கும், நகர்ப்றத்திலுள்ள சுமார் 25 லட்சம் ஏழை குடும்பங்களுக்கும் என மொத்தம் 60 லட்சம் குடும்பங்களுக்கும் வழங்கப்படும். இதற்காக 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் ’’ என்று அறிவித்திருந்தார்.
ஆனால், திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தால் அந்த இரண்டு தொகுதிகள் தவிர்த்து, மற்ற அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படும் என்றும் சொல்லியிருந்தார் முதல்வர் எடப்பாடி. இந்த அறிவிப்பு பாராளுமன்ற தேர்தலையும் 22 சட்டமன்ற இடைத் தேர்தலையும் மனதில் வைத்துதான் வழங்கப்படவுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினோம். இது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், முதல்வரின் அறிவிப்புக்கு தடை விதித்ததுடன், நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் வழங்கலாம் என உத்தரவு பிறப்பித்தது. இதனால், அந்த 2,000 ரூபாய் அப்போது வழங்கப்படவில்லை. அதேசமயம், தேர்தல் முடிந்ததும், அந்த 2000 ரூபாயை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், இப்போது வரை வழங்கவில்லை.
இதற்கிடையே, கொரோனா நோய் தொற்று பரவலால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பொது மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அவர்களுக்கு வெரும் 1000 ரூபாய் மட்டுமே வழங்கியது. ரேசன் பொருட்கள் கூட 5 மாதங்களுக்கு மட்டுமே வழங்கினார்கள். மக்கள் மீது உண்மையாகவே முதல்வர் எடப்படிக்கு அக்கறை இருக்குமானால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, சிறப்பு நிதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,200 கோடி ரூபாயை கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு வழங்கியிருக்கலாம். ஆன, அதையும் செய்யவில்லை. அந்த 1,200 கோடி ரூபாய் என்னவானது ?
அதேபோல, கட்டுமானத் தொழிலாளர்கள் வாரியம் உள்ளிட்ட 14 அமைப்புச்சார வாரியங்களில் பதிவு பெற்ற சுமார் 27 லட்சம் தொழிலாளர்கள் கொரோனாவால் வேலையிழந்து தவித்தனர். அவர்களுக்கு தலா 1000 ரூபாய் என 2 முறை அறிவிக்கப்பட்டு அவர்கள் வங்கி கணக்கில் டொபாசிட் செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.ஆனால், வாரியத்தில் தங்கள் உறுப்பினர் கார்டை புதுப்பிக்கவில்லை என்று சொல்லி சுமார் 10 லட்சம் பேருக்கு இதுவரை எந்த நிவாரணம் உதவியும் கொடுக்கப்படவில்லை.
கட்டுமானத் தொழிலாளர்களின் சேம நல நிதி தொகுப்பிலிருக்கும் தொகையை எடுத்து, கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. அந்த வகையில் டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் ரூபாய் 5 ஆயிரம் வீதம் வழங்கியது. ஆனால், தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கான சேம நல நிதி தொகுப்பில் 3,700 கோடி நிதி இருந்தும் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டுள்ளன.
தற்பொழுது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு ரேஷன் கார்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படப்போவதாக செய்திகள் வருகிறது. இது 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையொட்டி வழங்கப் போவதாக ஆளும் கட்சியில் உள்ளவர்களே கூறி வருகிறார்கள். எனவேதான் சர்க்கரை கார்டுதாரர்களை அரிசி கார்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று 5 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரம் சர்க்கரை கார்டுகள் அரிசி கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலே முடங்கியிருந்த மக்களுக்கு அப்போதே இந்த நிதி உதவியை ஏன் கொடுக்கவில்லை என்பதுதான் இப்போதைய கேள்வி ! எனவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்கெனவே 2019-ல் அறிவித்த ரூபாய் 2 ஆயிரம், இப்போது வழங்கவிருப்பதாக சொல்லப்படும் ரூபாய் 2 ஆயிரம், மேலும் ஆயிரம் ரூபாய் சேர்த்து ஆக மொத்தம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5,000 வழங்க வேண்டும்.
தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை மீட்பதற்காக செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் தலைமையில் உயர்மட்ட குழுவை தமிழக அரசு அமைத்தது. அந்தக்குழு 275 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்திருக்கிறது. அதில் மிக முக்கியமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு அவர்களின் சேம நல நிதி ரூபாய் 3,700 கோடியிலிருந்து நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும், கிராமத்திலுள்ள 100 நாள் வேலை போன்று நகரத்திலும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்றும், இதுபோன்ற எண்ணற்ற பரிந்துரைகளை கொடுத்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. ஆனால் அந்த பரிந்துரைகளை இதுவரை தமிழக அரசு செயல்படுத்தவில்லை. அப்புறம் எதற்கு இத்தகைய பொருளாதார கமிட்டிகளை அமைக்கிறீர்கள் ? அதனால் கமிட்டி என்பதே கண் துடைப்பாகவே இருக்கிறது.
கொரோனா காலத்தில் அடித்ததோ கொள்ளையோ கொள்ளை. கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளிலும், அரசு ஒதுக்கிய மையங்களிலும் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. அவர்களுக்கு உணவுகளை பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், என்ஜிஓக்கள் (சூழுடீ க்கள்) , தொண்டு நிறுவனங்கள் உணவுகளை வழங்கினார்கள். ஆனால் இதற்கெல்லாம் கணக்கில்லாமல் அரசே உணவு வழங்கியதைப் போல் பில் போட்டு எடுத்து கொண்டார்கள் என்று பேசப்படுகிறது. அதே போல் முகக்கவசம், சானிடைசர் கேன் கனக்கில் வழங்கினார்கள். ஆனால் இதற்கும் அரசு கணக்கிலேயே வரவு வைத்து கொண்டனர் என்றும் கூறப்படுகிறது. அதே போன்று அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் வீட்டுக்கு செல்லாமல் தனியார் தங்கும் விடுதிகள்,ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். அதற்கு கொடுத்த வாடகையும் இருமடங்காக கணக்கு போட்டு எடுத்து கொண்டனர் என்றும் சொல்லப்படுகிறது.
கொரோனா காலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மக்களுடைய துன்பத்தில் கூட தங்களை வளமாக்கிக் கொண்டவர்கள்தான் இந்த ஆட்சியாளர்கள் என்பது தெரியும். மக்கள் பிரதிநிதியான எங்களிடம் இந்த அரசைப் பற்றிய பல்வேறு முறைகேடுகளை பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள். எனவே, கொரோனா காலத்தில் நடந்த முறைகேடுகளை ஆதாரங்களுடன் நாங்கள் பாராளுமன்றத்தில் எடுத்துரைக்க இருக்கிறோம் ‘’ என்று முதல்வர் எடப்பாடியின் அரசு நிர்வாகத்தை கடுமையாக தாக்கினார் விஷ்ணுபிரசாத் எம்.பி. !