
சீமான் பேச்சுக்கு நான் பதில் சொல்ல முடியாது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
வேங்கைவயல் கிராமத்தில் மருத்துவ முகாம் நிகழ்வினை துவங்கி வைத்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காரைக்குடி அருகே ஒருவர் தன் இல்லத்தின் அருகே வைத்திருந்த பெரியார் சிலையை, அதுவும் தமிழக அரசின் எல்லைக்குள் பெரியாரின் சிலை அப்புறப்படுத்தப்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது.
அரசாங்கம் பட்டியலின மக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற தேவை இல்லை. குற்றவாளிகளை கண்டிப்பதால் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனினும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலை சிறுத்தைகளும் வைக்கிறது. இந்த பிரச்சனையை தொடக்கத்தில் இருந்தே விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறது. நிகழ்வு தெரிந்த உடன் ஆர்ப்பாட்டம் நடத்தியது விடுதலை சிறுத்தைகள் தான். கூட்டணியில் இருந்து கொண்டே பல பிரச்சனைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.
பெரியார் மண் என்று பேசக் கூடாது என சீமான் கூறியுள்ளார். அவருக்கு பெரியார் மீதும் திராவிட இயக்கத்தின் மீது உள்ள நிலைப்பாட்டில் அவர் பேசுகிறார். ஏனென்றால் அதுதான் அவரது அரசியல். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதை விட தன் அரசியல் பேசப்பட வேண்டும் என அவர் நினைக்கிறார். அதனால் அவர் சொல்லுகிறார். அதற்கு நான் பதில் சொல்ல முடியாது” எனக் கூறியுள்ளார்.