மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் பல இடங்களில் இதற்குக் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திமுக மகளிர் அணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டமானது சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசிய கனிமொழி, ''பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நாட்டையே வன்முறையின் பக்கம் தள்ளிக் கொண்டிருக்கிறது. மணிப்பூரில் வன்முறையை தடுக்க பாஜக அரசு தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டில் எங்கு எந்த பெண்களுக்கு பிரச்சனை என்றாலும் நாங்கள் குரல் எழுப்புவோம். பாஜக ஆட்சி செய்யும் ஒவ்வொரு மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவத்தைதான் தொடர்ந்து பார்த்து வருகிறோம். உலகத்தையே உலுக்கும் அளவுக்கு மணிப்பூரில் வன்முறை நடந்து கொண்டிருக்கிறது.
மணிப்பூரில் ஒரே நாளில் கலவரம் வெடிக்கவில்லை. அங்கு ஆண்டாண்டுகளாக பிரச்சனை நடக்கிறது. மக்களின் உணர்வுகளை மணிப்பூர் மக்களின் மாநில முதல்வர் புண்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் மணிப்பூர் முதல்வர் பேசி வருகிறார். வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் பிரதமர் மணிப்பூர் கலவரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்பாவி பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் பிரதமர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?. மணிப்பூர் பழங்குடி மக்களுக்கு எதிராக பாஜக முதலமைச்சர் பிரேன் சிங் செயல்பட்டு வருகிறார்'' என்றார்.