தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன், எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்துச் சொன்னால் அவர்களை மோசமாகப் பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் பாஜக தலைவராக இருக்கும் போது கட்சியில் குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கட்சியில் சேர்க்கவில்லை. ஆனால் தற்போது குற்றப்பின்னணி உள்ளவர்கள் தற்போது பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்றார். இது பா.ஜ.கவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இத்தகையச் சூழலில்தான் ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா நேற்று முன்தினம் (12.06.2024) ஆந்திராவில் நடந்தது. அப்போது மேடையில் தமிழிசை அமித்ஷாவுக்கு வணக்கம் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா உடனே அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கிறார். பதிலுக்குத் தமிழிசை ஏதோ கூற வரும்போது அதனை மறுத்து அமித்ஷா பேசும் வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் இது குறித்து தமிழிசை சௌவுந்தரராஜன் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக ஆந்திராவில் சந்தித்து பேசினேன். அப்போது தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலவரம் மற்றும் அந்தச் சவால்களை எதிர்கொள்ளும் விதம் பற்றி கேட்கதான் அவர் என்னை அழைத்தார். அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை கூறினார். இது தொடர்பாக விரிவாக கூற முற்படுகையில் போதிய நேரமின்மையால் பணிகளை தொடருமாறு அவர் அறிவுறுத்தினார். இது போன்ற தேவையற்ற வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.