சி.பி.எம்.மின் 22 வது மாநில மாநாடு நேற்று தூத்துக்குடியில் உள்ள ஏ.வி.எம்.மின் கமலாலய மண்டபத்தில் தொடங்கியது. மாநிலக்குழு உறுப்பினரான மீனாட்சிகந்த்ரம் செங்கொடி ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து சிறுவர், சிறுமியர், மற்றும் செங்கொடித் தொண்டர்களின் அணி வகுப்பு. முதல் நாள் மாநாட்டின் போதே அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் வந்து விட்டார். இரண்டாவது நாளான இன்று சி.பி.எம்.மின் அகில இந்திய பொ.செ.வான சீத்தாராம் யெச்சூரி வருகிறார்.
மாநாட்டின் துவக்கம் உரையாகப் பேசிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான பிரகாஷ்கராத்,
மார்க்சிஸ்ட் கட்சியின் அகில உலக மாநாடு வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. அதன் முன்னோட்டமான மாநாடு இது. இடதுசாரிகள் எதிர்காலத்தில் நம்பிக்கையை அளிக்கிற சக்தியாக விளங்கப் போகிறது. நவீன தாராளமயத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக ஏகாதிபத்திய நாடுகள், நட்பு பாராட்டுகிற நாடுகள் கூட அமெரிக்காவை எதிர்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகளை முற்போக்கு சக்தி, புரட்சிகர சக்திகள் பயன்படுத்திக் கொண்டு ஆக்கம் பெற வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளாக மோடி அரசு மத வெறி ஏதேச்சதிகார அரசாகச் செயல்பட்டு வருகிறது. சாதாரண மக்களுக்கான அரசாக மோடி அரசு செயல்படவில்லை பெரும் முதலாளிகளுக்கான கார்ப்பரேட்களுக்கான அரசாகச் செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிற மோடி அரசு கார்ப்பரேட்களுக்கான கொள்கையைக் கூச்சப்படாமல் கடைப்பிடிக்கிறது. 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புத் தருவதாக வாக்குறுதி கொடுத்த மோடி அரசு எதனையும் செய்யாமல் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற மோடி அங்குள்ள அரசுடன் 36 விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டவர். போர் விமானங்கள் காண்ட்ராக்ட் பற்றிக் கேட்டால், அது அரசு ரகசியம் என்று சொல்கிறார். இந்த விமானங்களின் உதிரிபாகங்கள் தயார் செய்வதற்கான ஒப்பந்தம் மூலம் அம்பானியின் கம்பெனிக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் வழங்கிய பொதுத்துறை நிறுவனத்தைப் புறக்கணித்து விட்டு, அதனை நசுக்கிய மோடி, தனி நபரின் நிறுவனத்திற்கு ஏன் வழங்கினார் அந்த நிறுவனத்திற்கு ராணுவத் தளவாடம் உற்பத்தி செய்யவே தகுதி கிடையாது. இதன் மூலம் மோடி ஆட்சியின் மிகப் பெரிய ஊழல் வெளிவந்ததுள்ளது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியான பஞ்சாப் நேசனல் வங்கியில் 11480 கோடி மோசடி செய்த நீரவ்மோடி அவரது மனைவி மகன் கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியே வெளியேறிவிட்டனர். சி.பி.ஐ. விசாராணை வரும் என்ற திட்டத்தில் அவரை நாட்டைவிட்டே வெளியேற மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. மோசடி நீரவ்மோடி, சுவிட்சர்லாந்து உலக முதலீட்டாளர் மாநாட்டில் மோடி பங்கேற்ற கூட்டத்தில் மோடியுடன் ஓரே போட்டோவில் நிற்கிறார். ஊழல் இல்லை என்று மோடி தம்பட்டம் அடித்தாலும் ஊழல் தான். தமிழகத்தில் திராவிடக் கட்சி ஒன்று சீரழிந்துவிட்டது. இன்னொன்று தேக்கத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த மாநாடு ஒரு திருப்பு முனையை உருவாக்கும் என்று பேசினார்.
செய்தி: படம்: ப.இராம்குமார்