சரியான பராமரிப்பு இல்லாததாலும், நிர்வாக சீர்கேடு காரணமாகவும் தமிழகத்தில் மின்வெட்டு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், ''கிட்டத்தட்ட ஐம்பது அறுபது ஆண்டு காலமாக தமிழகத்தில் திராவிட மாடலில்தான் ஆட்சி நடக்கிறது. இன்றைக்கும் தமிழகத்தில் தனித் தனிச் சுடுகாடுகள் இருக்கிறது, இன்னும் தமிழகத்தில் பல கோவில்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலில் நுழைய முடியவில்லை, இன்னைக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் கிராமத்திற்குள் செல்ல முடியவில்லை, இதுதான் திராவிட மடலா என்று முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டுக்கொள்கிறேன். திராவிட மாடல் என்றால் சமத்துவம் இருக்க வேண்டும் பல ஊர்களில் ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித் தனி சுடுகாடு இருக்கிறது. நான் எஸ்சி ஆணையத்தின் வைஸ் சேர்மன் இருந்தபொழுது பல இடங்களில் இதை சுட்டிக்காட்டி இருக்கிறேன். அப்போது எதை வைத்து நீங்கள் திராவிட மாடல் என்று சொல்கிறீர்கள்'' என்று கேள்வி எழுப்பினார்.