தெ.சு. கவுதமன்
ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதிலிருந்தே தமிழ்நாடு பரபரத்துக் கிடக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் நஷ்டமடைந்து இதுவரை 44 பேர் தற்கொலை செய்துள்ளனர். 44 பேர் என்பது 44 குடும்பங்களின் இழப்பு. இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த மசோதாவுக்கு வடிவம் கொடுத்த ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவர்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை முறைப்படுத்தும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவர் சில சந்தேகங்களைக் கேட்டபோது நேரிலேயே தெளிவான விளக்கம் தந்தோம். அந்த சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்த ஆளுநர், கடந்த 6 ஆம் தேதி திருப்பி அனுப்பியுள்ளார். இது தொடர்பான சட்டம் இயற்ற சட்டப் பேரவைக்கு அதிகாரம் உண்டு என்று நீதிமன்றமே தெரிவித்துள்ளது. ஆனால், அதிகாரம் இல்லை என்று ஆளுநர் கூறுகிறார். மாநிலப் பட்டியலில் பொது அதிகாரம், பொது சுகாதாரம், கேளிக்கை மற்றும் சூதாட்டம் ஆகியவற்றின் கீழ் வரும் ஷரத்துகளின் அடிப்படையில் சட்ட மசோதா இயற்றி நாங்கள் ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். ஆனால், திறன் விளையாட்டைக் குறிப்பிட்டு அதை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளது ஏற்கத்தக்கதல்ல. எனவே, அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டப் பேரவையில் மீண்டும் இந்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஆளுநரின் நிலைப்பாடு குறித்து தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன் கூறுகையில், "இந்த சட்டம் தொடர்பாக நீதியரசர் சந்துரு தெளிவான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் சட்டத்தை இயற்றக்கூடிய அதிகாரம் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. ஒன்றிய அரசில் இதனை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம் இல்லாதபோது, மாநில அரசுக்கு இதற்கான அதிகாரம் இல்லையென்று சொல்லக்கூடிய அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் என்ன நீதியரசரா? ஆளுநர் செய்வது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம். இதில் முக்கியமாக முரண்பாடாக அனைவரும் சுட்டிக் காட்டுவது என்னவென்றால், அவசர சட்டத்துக்கு ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவை மட்டும் கையெழுத்திடாமல் தள்ளி வைக்கிறார். இதற்காக நான்கு மாத கால அவகாசம் எடுத்துக் கொள்கிறார். இடைப்பட்ட காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனத்தினரை ஆளுநர் ரகசியமாக சந்தித்ததாக தகவல்கள் வருகின்றன. அது உண்மையா பொய்யா என ஆளுநர் மறுப்பு தெரிவிக்கவில்லை. கண்ட கண்ட விஷயங்கள் குறித்தெல்லாம் ராஜ்பவன் தரப்பிலிருந்து ட்வீட் போடும்போது, இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆளுநருக்கு இருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு முக்கியமான அரசாங்கப் பொறுப்பிலிருக்கக் கூடியவர், ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தினரைச் சந்திக்கக்கூடிய அதிகாரம் இருக்கிறதா? எப்படி இத்தகைய செயலை இவர் செய்ய முடியும்? அவர்களைச் சந்தித்த பின் இப்படிச் செய்திருப்பாரென்றால், அந்த சந்திப்பில் என்ன நடந்திருக்கக்கூடும்? இந்தச் சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் இதனால் ஆதாயமடையப் போவது ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தினர் தான். அப்படியானால் அவர்கள் ஆதாயம் அடைவதற்கு ஆளுநர் மெனக்கெடுகிறாரா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது. தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் பெறக்கூடிய ஆளுநர் இப்படியான சந்தேகங்களுக்கு இடம் தரலாமா? இப்படி இடம் தருவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகாகுமா? கவர்னரின் அசரீரி குரல் போல அண்ணாமலை தான் பேசுகிறார். இருவருமே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பதைத் தவிர இருவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? எனவே இதுகுறித்தெல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்தாவது ஆளுநர் தெளிவுபடுத்துவாரென்று எதிர்பார்க்கிறோம்." என்றார்.
ஆன்லைன் சூதாட்டத்தின் மாய வலையில் பலரும் சிக்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் சூழலில், தமிழ்நாடு ஆளுநரின் செயல் தமிழக மக்கள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் தான் இந்த ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முடியும்.