பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா தமிழகத்தின் மெரும்பாலான இடங்களில் அவர்களின் கட்சியினர் சார்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்தில் பாஜக இளைஞரணி சார்பில் ‘இளைஞர் எழுச்சிகூட்டம்’ நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பாஜகவின் மாநில துணை தலைவர் அண்ணாமலை பங்கேற்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜக - அதிமுக இடையே கொள்கை வேறுபாடு இருந்தாலும், கூட்டணி தர்மத்தின் படி செயல்பட்டு வருகிறோம். மும்மொழிக் கல்விக்கொள்கை விவகாரத்தில் பா.ஜ.க தெளிவாக இருக்கிறது.
மேலும் மும்மொழி கொள்கையைப் பொறுத்தவரை அந்தந்த மாவட்ட நிர்வாகமே தேர்வு செய்யலாம் என்ற நிலை உள்ளது. இந்தியை கட்டாய மொழியாக மத்திய அரசு அறிவிக்கவில்லை. தமிழகத்தில் திமுக தலைவர்கள் நடத்தும் 47 பள்ளிகளில், மூன்றாவது மொழியாக இந்தி உள்ளது. ‘தமிழகத்தில் இரு மொழிக் கல்விக் கொள்கை தொடரும்’ என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது அவரது கருத்து. ஆனால், தமிழக மக்கள் மும்மொழிக் கொள்கை வேண்டும் என்றே நினைக்கின்றனர்.
நீட் தேர்வு குறித்து தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக எந்த மாணவரோ, பெற்றோரோ போராடவில்லை, அரசியல் கட்சி தலைவர்கள்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்துதான் அதிகளவிலான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. 180 கேள்விகளில், 173 கேள்விகள் தமிழக அரசின் பாடத் திட்டங்களில் இருந்தே கேட்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா இன்னும் சரியாக புரிந்து கொள்ளவில்லை, இந்தாண்டு தேர்வு முடிவுகள் வரும்போது அவரே தனது முடிவை மாற்றிக் கொள்வார். தமிழகத்தில், 13 மாணவர்களின் தற்கொலை தான் கடைசியாக இருக்கும் இனிமேல் நடக்காது. புதிய கல்விக் கொள்கையை எல்லா மாநிலங்களும் ஏற்க ஆரம்பித்துவிட்டன.
பெரியாரின் கொள்கைகளில் பலவற்றை நாங்கள் ஏற்க மாட்டோம். அதேநேரத்தில் மக்களின் சமூகநீதிக்காகப் பாடுபட்ட பெரியாரின் சில கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறோம். பிறந்தநாளின்போது தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது அரசியல் நாகரிகம். அதை நாங்கள் செய்கிறோம்.” என்றார்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் குறித்து கேள்வி எழுப்பட்டபோது, அவர் அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.” என்றார்.