அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் முரண்பாடுகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது எடப்பாடி அணி எனவும், ஓபிஎஸ் அணி எனவும் அதிமுக பிரிந்து கிடக்கிறது. இந்தச் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சட்டப்பேரவை அலுவல் கூட்டத்தில் எதிர்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி தரப்பு சட்டப்பேரவை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதேபோல் ஓபிஎஸ் தரப்பும் கடிதம் எழுதி இருக்கிறது.
இந்நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. மேலும் சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணைத்தலைவர், எம்.எல்.ஏக்களின் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைக்கு வந்த ஓபிஎஸ் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கையில் அமைந்தார். சட்டப்பேரவையில் இன்றைய அலுவல்கள் அனைத்தும் முடிவடைந்த பின் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவைக் கூட்டத்தை நாளை காலை 10 மணிக்கு ஒத்திவைத்தார்.
இதனையடுத்து ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக சார்பாக எங்களது ஜனாநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டோம். கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் சபாநாயகரை சந்தித்து பேசினோம். எம்ஜிஆர், தொண்டர்களுக்காகத்தான் அதிமுகவை தொடங்கி மூன்று முறை முதல்வராக இருந்தார். எம்ஜிஆர் மறைவிற்கு பின் பொதுச்செயலாளராக பதவியேற்று முதல்வராகவும் பொறுப்பேற்று ஆட்சி செய்தார். அடிப்படை தொண்டர்கள் ரத்தம் சிந்தி வளர்த்த இந்த இயக்கத்தை எவ்வித மாசும் ஏற்படாமல் காப்பற்றுகின்ற பொறுப்பில் நாங்கள் நின்றுகொண்டு இருக்கிறோம். சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவராக என்னை அங்கீகாரம் செய்ததை பாசிட்டிவாக பார்க்கிறேன் ” என்று கூறினார்.