நிலுவையில் இருந்த கோவில்களுக்கு சேரவேண்டிய வருமானங்களை பல்வேறு வழிகளில் கோவில்களுக்கு மீண்டும் கொண்டு சேர்த்துள்ளோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்து சமய அறநிலையத் துறையை பொறுத்த அளவில் பக்தர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் மக்களின் தரிசனத்திற்கு உண்டான வசதிகளை மேம்படுத்தி தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கோவிலுக்கு வரவேண்டிய வாடகை பாக்கிகள் நிலுவையில் இருந்தது. ஆட்சி பொறுப்பேற்றதும் நிலுவையில் இருந்த 260 கோடி ரூபாயை வசூலித்து கோவிலுக்கு கொண்டு சேர்த்துள்ளோம்.
பல கோவில்களில் கோவிலுக்கு பயன்படாத பொன்னை உருக்கி அதை தங்கம் வைப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வைத்து அதில் வரும் வருமானங்களையும் கோவிலுக்கு பயன்படுத்தி வருகிறோம். இப்படி பல்வேறு வகையில் கோவிலுக்கு சேர வேண்டிய சொத்துகளை எல்லாம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு கிட்டத்தட்ட 3884 கோடி ரூபாய் அளவிற்கு கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுள்ளோம். இந்த மீட்பு நடவடிக்கைகளும் தொடரும்.
மக்களின் தேவைகளையும் கோவிலின் புனரமைப்பு பணிகளையும் அரசு நிறைவேற்றித் தரும்” என்று கூறினார்.