Skip to main content

“இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை அறிவிக்க இருக்கிறோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 27/08/2023 | Edited on 27/08/2023

 

We are going to announce important decisions in the meeting of India Alliance Chief Minister M.K.Stalin

 

அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். அந்த வகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 கட்சிகள் பங்கேற்றன. ஆறு மாத காலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது.

 

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜுலை மாதம் 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கினார். இதில் 26 எதிர்க்கட்சிகளின் சார்பாக இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா (INDIA- INDIAN NATIONAL DEVELOPMENTAL INCLUSIVE ALLIANCE) என பெயர் சூட்டப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் மூன்றாவது கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி மற்றும் செப்டம்பர் மாதம் 1 ஆகிய இரு தேதிகளில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தின் போது இந்தியா கூட்டணிக்கு என இலச்சினை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தை சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒருங்கிணைக்க உள்ளதாகவும், இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

 

We are going to announce important decisions in the meeting of India Alliance Chief Minister M.K.Stalin

 

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் பவித்திரமாணிக்கத்தில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜின் மகள் செல்வப்பிரியா - விக்னேஷ் ஆகியோரது திருமணத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (27.08.2023) தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். அந்த நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திக்க இருக்கிறோம் என்று சொன்னால், ஏதோ ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வரும் தேர்தலாக மட்டும் நாம் நினைத்து விடக்கூடாது. அதையும் தாண்டி சொல்கிறேன், ஆட்சி மாற்றத்திற்காக நடைபெறும் தேர்தலாகக் கூட நினைத்து விடக்கூடாது. இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இன்றைக்கு சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும், ஒரு பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனென்றால், தமிழ்நாட்டைக் காப்பாற்றிவிட்டோம். இந்தியாவைக் காப்பாற்றும் நிலைக்கு நாம் இப்போது வந்திருக்கிறோம்.

 

இந்தியாவைக் காப்பாற்றுவதற்காகத்தான் 'இந்தியா' கூட்டணி அமைந்திருக்கிறது. பீகார் மாநிலத்தில், நிதிஷ் குமார் தலைமையில் கூடி எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி உருவாக முதல் கூட்டத்தை பீகார் மாநிலத்தில் நடத்தினோம். அதற்கு அடுத்து கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் இரண்டாவது கூட்டத்தை நடத்தினோம். அதில்தான் இந்தியா என்ற பெயரைத் தேர்வு செய்து, நம் கூட்டணிக்கு பெயர் அறிவித்தோம். அடுத்து வருகின்ற ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் மும்பையில் மூன்றாவது கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் முக்கிய முடிவுகளை எல்லாம் அறிவிக்க இருக்கிறோம். நானும் அந்தக் கூட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன். எனவே தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சியை உருவாக்கித் தருவதற்கு நீங்கள் எல்லாம் எவ்வாறு காரணமாக இருந்தீர்களோ, அதே போல் நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக மத்திய அரசு அமைவதற்கு, அது நல்லரசாக அமைவதற்கு நீங்கள் எல்லாம் காரணமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்