தமிழ்நாட்டில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பாஜகவின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ''வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஒருவர் பிரதமராக்க உறுதி எடுப்போம்'' என்று பேசியிருந்தார்.
அமித்ஷாவின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தான் அடுத்த பிரதமர் என அண்ணாமலையின் ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு பேச்சு எழுந்தது. உடனடியாக ஏ.என்.ஐ-க்கு பேட்டி அளித்த அண்ணாமலை, அதனை மறுத்திருந்தார். அதிமுக சார்பில் இது குறித்து கருத்து தெரிவித்த சில தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை மனதில் வைத்தே அமித்ஷா அப்படி பேசியிருப்பார் எனத் தெரிவித்தனர்.
‘தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமர்’ என அமித்ஷா சொன்னதன் பின்னணி என்னவென்று விசாரித்தபோது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டின் ஒரு தொகுதியில் இருந்து போட்டியிட திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
பா.ஜ.க.வின் தேசிய மட்டத்தில் இதுபோன்ற ஒரு பேச்சு அடிபட்டுவருகிறது. மேலும், இப்படியொரு திட்டத்தை ரொம்ப நாளாகவே மோடி கையில் வைத்திருக்கிறாராம். பா.ஜ.க.வின் தேசியத் தலைமையும் மோடியின் இந்த முடிவை ஏற்றுக்கொண்டு இருக்கிறதாம். இதை மனதில் வைத்துக்கொண்டுதான், அண்மையில் தமிழகம் வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமர் ஆகலாம்னு சூசகமாகத் தெரிவித்தாராம். ஆனால், அமித்ஷாவுக்கும் மோடிக்கும் ஆகாமல் போய்விட்டது என்றும், அதனால் அவர், தமிழகத்தில் இருந்து புதிய நபர் ஒருவரை பிரதமராக்க விரும்புகிறார் என்றும் சிலர் கற்பனை பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தென் மாநிலங்களில் இருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு எம்.பி.க்களைப் பெற வேண்டும் என ஆசைப்படுகிறாராம் மோடி. அதிலும் தமிழகத்திலிருந்து பத்து எம்.பி.க்களாவது தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது அவருடைய டார்கெட்டாம். ஆனால், தற்போதைய தமிழக பா.ஜ.க.வின் செல்வாக்கை வைத்துக்கொண்டு ஒரு எம்.பி.யைக் கூட பெற முடியாது என்று உளவுத்துறை மோடிக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறதாம்.
அதனால், தமிழகத்தில் வெற்றி பெறவும், தென் மாநிலங்களின் கவனத்தை கணிசமாக ஈர்க்கவும் இந்த முறை தமிழகத்தில் மோடி போட்டியிட வேண்டும் என அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்களாம். அதோடு இது, சட்டமன்றத் தேர்தலின் போதும் பா.ஜ.க.வுக்கு கைகொடுக்கும் என்றும் அவர்கள் தரப்பால் கணிக்கப்படுகிறது. அதே நேரம், ராஜ்நாத் சிங் போன்ற அக்கட்சியின் சீனியர்களோ, தமிழகத்தில் போட்டியிட்டால் மோடி யால் வெற்றிபெற முடியுமா? என்று கேள்வி எழுப்புவதோடு, சிக்கலை அவர் தேடிக்கொள்ளாமல், தனது சிட்டிங் தொகுதியான வாரணாசியிலேயே அவர் மீண்டும் போட்டியிடட்டும் என்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.