கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அன்னி ராஜாவும், பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் கே. சுரேந்திரனும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் வயநாட்டில் சிபிஐ வேட்பாளர் அன்னி ராஜா இன்று (04.03.2024) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வயநாடு தொகுதி சி.பி.ஐ. வேட்பாளர் அன்னி ராஜா கூறும்போது, “இடது முன்னணி வேட்பாளராக என்னிடமிருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை மக்கள் மத்தியில் தெரிந்துகொள்ள நான் செல்கிறேன். எனவே, நாங்கள் வாக்களித்தால் நீங்கள் இங்கு வருவீர்களா என்று என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். உங்களுக்காக இந்தத் தொகுதியில் இருந்து என்னைத் தேர்ந்தெடுத்தால் நான் இங்கே இருப்பேன் என்று அவர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். நான் அவர்களுடன் இருப்பேன் என்று அவர்களிடம் கூறும்போது, மனித - விலங்கு மோதல் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. இதற்கு, நிரந்தரத் தீர்வு காண்பதற்கு மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இதற்காக தற்போதுள்ள சட்டத்தில் திருத்தம் செய்வது முக்கியம். ஆனால் அது கேரள சட்டசபையில் அல்ல. நாடாளுமன்றத்தில் நடக்கும்” எனத் தெரிவித்தார்.
அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்.பி.யும் வேட்பாளருமான ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் தனது தொகுதியான வயநாட்டில் ரோட் ஷோ நடத்தினார். அப்போது அவரது சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார். அப்போது ராகுல் காந்தி கூறுகையில், “வயநாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் எனக்கு அன்பையும், பாசத்தையும், மரியாதையையும் அளித்து என்னைத் தங்கள் சொந்தமாக நடத்தினார்கள். உங்களின் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பது எனக்குக் கிடைத்த பெருமை. நான் உங்களை ஒரு வாக்காளர் போல் நினைக்கவில்லை. அது போன்று உங்களை நடத்தவில்லை. என் சகோதரி பிரியங்காவை எப்படி நினைக்கிறேனோ அதே மாதிரி தான் உங்களையும் நடத்துகிறேன். உங்களை பற்றி நினைக்கிறேன். எனவே வயநாட்டின் வீடுகளில் எனக்கு சகோதரிகள், அம்மாக்கள், அப்பாக்கள் மற்றும் சகோதரர்கள் உள்ளனர். அதற்காக என் இதயத்தில் இருந்து நன்றி கூறுகிறேன்.
மனித - விலங்கு மோதல், மருத்துவக் கல்லூரி அமைப்பது போன்ற பிரச்சனை உள்ளது. இந்த தேர்தல் போராட்டத்தில் வயநாடு மக்களுடன் நான் நிற்கிறேன். மருத்துவக் கல்லூரி தொடர்பாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்தோம். முதலமைச்சருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் எதையும் செய்யவில்லை. டெல்லியில் எங்கள் ஆட்சி அமைந்தால், கேரளாவில் ஆட்சி அமைந்தால், இந்த இரண்டையும் செய்வோம். இந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதன் மூலம், வயநாடு தொகுதியில் முக்கிய தலைவர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதால், அங்கு தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.