கடந்த 30 வருடமாக அடிப்படை வசிதிகள் இல்லாததால் தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர் திருவாடானை அருகே உள்ள கிராம மக்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, எஸ்.பி.பட்டிணம் அருகே உள்ள அம்பேத்கர் நகரில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராம பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை கிடையாது. மேலும் மயானம் சாலை வசதிகள் இல்லை. இது குறித்து அப்பகுதி மக்கள், "எங்களது கிராமத்தில் 38 குடும்பங்கள் கடந்த 30 வருடமாக வசித்து வருகிறோம். அன்றிலிருந்து இன்றுவரை எவ்வித வசிதிகளும் பஞ்சாயத்து நிர்வாகம் செய்து தரவில்லை. இப்பவும் குடி நீருக்கும், மற்ற உபயோகத்திற்கான தண்ணீரும் பணம் கொடுத்துதான் வாங்கி பயன்படுத்தி வரும் அவல நிலையில் உள்ளோம்.
விஞ்ஞானம் வளர்ந்தும் எங்களது கிராமத்தில் தெருவிளக்குள் இல்லை. அதே நேரத்தில் எங்களது கிராமத்திற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தார்சாலை அமைத்தாக நாளிதழில் விளம்பரமும் செய்துள்ளார்கள். ஆனால், அந்த தார்சாலை போடவே இல்லை. மேலும் எங்களது கிராம மக்களுக்கென்று தனியாக மயானம் கிடையாது. இது பற்றி மாவட்ட நிர்வாகத்திடம் 50-க்கும் மேற்பட்ட மனுக் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த இரண்டு நாளைக்கு முன்பு திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுக் கொடுத்தபோது அவர் எஸ்.பி.பட்டிணம் ஜமாத் தலைவரிடம் கேட்டு சொல்கிறேன் என்று அலட்சியமாக பதில் கூறுகிறார். இவ்வாறு அதிகாரிகளும் எங்களை அலைக்கழிப்பதால் நாங்கள் வருகிற மக்களவை தேர்தலை புறக்கணிக்கும் விதமாக எங்களது வாக்காளர் அடையாள அட்டையை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்க போகிறோம்" என தெரிவித்தார்கள்.