நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் பாடல் பின்னணியில் இசைக்க, மாநாடு மேடைக்கு வருகை தந்த த.வெ.க. தலைவர் விஜய், தொண்டர்களை நோக்கி நடந்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த விஜய், 100 அடி கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை வழியில் த.வெ.க. செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய விஜய், பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகிய 5 தலைவர்களைத் தான் நம்முடைய கொள்கைக்கு வழிகாட்டியாக வைத்துக் கொள்ளப் போகிறோம் என்று தெரிவித்தார். அப்போது பெரியார் குறித்து விஜய் பேசும் போது, “நமது கொள்கை தலைவர் பகுத்தறிவு புரட்சியாளர் தந்தை பெரியார். என்னது பெரியார் உங்க கொள்கை தலைவரா? அப்படின்னு ஒரு கூட்டம், அவர்களா ஒரு முடிவுக்கு வந்து கூச்சல் போட்டு ஒரு பெயிண்ட் டப்பாவைத் தூக்கிட்டு கிளம்பிடுவாங்க.... அந்த பெயிண்ட் டப்பா பிஸ்னஸை நான் அப்புறம் பார்த்துகிறேன்.
ஆமாம் பெரியார் எங்கள் கொள்கை தலைவர்தான். அது ஏன்னு சொல்கிறேன். பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப்போவது கிடையாது. அதில் எங்களுக்கு உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. அரசியலில் அண்ணன், தம்பி உறவை அறிமுகப்படுத்திய அறிஞர் அண்ணா சொன்ன மாதிரி, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்..’ என்பதுதான் எங்களது நிலைப்பாடும். ஆனாலும், பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்த்திருத்தம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை என்று பெரியார் சொன்ன இது அனைத்தையும் நாம் முன்னெடுக்கப் போகிறோம்.” என்றார்.