சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “ராகுல் காந்தியின் பதவிப் பறிப்பு! தேர்தல் சனநாயகத்தை ஒழித்துக் கட்டுவதற்கான ஃபாசிச பாஜக அரசின் திட்டமிட்ட அரசியல் சதியைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னையில் நடைபெறும் சனநாயகப் பாதுகாப்பு அறப்போர்” எனத் தெரிவித்திருந்தார்.
பல்வேறு கட்சியினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார்கள். காங்கிரஸ் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன், “பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு ஏஜெண்ட். இதைவிடக் கேவலம் வேறொன்றும் இருக்க முடியாது. தனிப்பட்ட முதலாளிக்கு 140 கோடி மக்களுக்கான பிரதமர் ஏஜெண்ட்டாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். அதானியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே நாடாளுமன்றம் நடக்கவில்லை. அதானி என்ற நபர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
2019ல் போடப்பட்ட வழக்கிற்கு 2023ல் தீர்ப்பு வழங்குகிறார்கள். அந்த தீர்ப்பில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை எனச் சொன்னதோடு மட்டுமல்லாமல் 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கிறது. தீர்ப்பு வழங்கப்பட்டாலும் தீர்ப்பு அமலாகவில்லை. ஆனால் அவசரமாக 24 மணிநேரத்தில் பதவி பறிக்கப்படுகிறது. வீட்டைக் காலி செய் என உத்தரவிடப்படுகிறது. இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை” எனக் கூறினார்.