சென்னையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திரிபுராவில் பாஜகவின் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக சார்பில் தலைமை கழக செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்பை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசும்போது, "மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது மதச்சார்பற்ற ஆட்சியை நடத்தியது. ஆனால், தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு மதவாதத்தை தூண்டும் விதமாகச் செயல்படுகிறது. இந்திய அரசு மதம் சார்ந்த அரசாக இருக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ் நோக்கம். இந்தியாவின் பெயரை மாற்றுவது தான் அவர்களின் கனவு திட்டமாக உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற அவர்கள் துடிக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று இதையெல்லாம் சாதிக்கலாம் என்று கனவு காண்கிறார்கள். அவர்களின் இந்த கனவு ஒருபோதும் பலிக்காது.
ஒன்றிய அரசு என்பது மாநில அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால், அவர்கள் மாநில அரசுகளுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள். 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆபத்தான தேர்தல் ஆகும். எப்படியாவது காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாஜகவுக்கு எதிராக வெற்றிபெற வேண்டும்" என்று பேசினார்.