தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் போட்டியிடும் தொகுதிகள் இறுதிச் செய்யப்பட்டு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார். அதன்படி, காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதியில் சிந்தனைச் செல்வன், வானூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் வன்னியரசு, நாகை சட்டமன்றத் தொகுதியில் ஆளூர் ஷா நவாஸ், செய்யூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் பனையூர் பாபு, அரக்கோணம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் கௌதம சன்னா, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் தனிச்சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.