சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுடன் கூடிய தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மக்கள் மனநிறைவு அடையக்கூடிய வகையில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை இருக்கும். குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூபாய் 1,500 வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்" என்று வாக்குறுதி அளித்தார்.
மேலும் அவர் பேசும்போது, "அ.தி.மு.க. அறிவிக்க இருந்தது முன்கூட்டியே கசிந்துவிட்டதால் தி.மு.க. அதை அறிவித்துவிட்டது. அதிமுகவுடனான அமமுக இணைப்பு இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். அ.ம.மு.க.வில் இருந்து மேலும் பலர் அ.தி.மு.க.விற்கு வரவுள்ளனர். மார்ச் 12- ஆம் தேதிக்குள் முழுமையாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சிறுபான்மையின மக்களின் முழு ஆதரவு அ.தி.மு.க.வுக்கு எப்போதும் உண்டு. தமிழ்நாட்டு மக்கள் அ.தி.மு.க. ஆட்சியே வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்களிடம் மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்றுள்ளது. தமிழக அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. அ.ம.மு.க.வில் இருந்து மேலும் பலர் அ.தி.மு.க.விற்கு வரவுள்ளனர்" என்றார்.
இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது முதல்வர், துணை முதல்வருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.