நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியக்குழு தேர்தலில் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருந்தாலும் திமுகவினருக்கிடையே யார் தலைவர் பதவியை கைப்பற்றுவது என்கிற போட்டா போட்டியால் பரபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் 27 வார்டுகளை கொண்டது. இதில் திமுக 17 வார்டுகளிலும், காங்கிரஸ் 1 வார்டிலும், அதிமுக 5 வார்டுகளையும், பாமக ஒரு வார்டுகளையும், சுயேட்சை 3 வார்டுகளையும் கைப்பற்றினர். பெரும்பான்மையான கவுன்சிலர்களை கொண்ட திமுகவில் மயிலாடுதுறை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெருமாளும், தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தியும் தங்களது மனைவிகளுக்கு தலைவர் பதவியை பெற பெரும் முயற்சி செய்து வருகின்றனர். யார் அதிக மெஜாரிட்டி காட்டுவது என்கிற முனைப்பில் கவுன்சிலர்களை கடத்தி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இரு ஒன்றிய செயலாளர்களிடமும் சிக்கியிருக்கு கவுன்சிலர்களின் காட்டில் தற்போது பணமழையும், மது மழையும் பெய்துவருகிறது, கூவத்தூர் விவகாரத்தை தாண்டிவிட்டது என்கிறார்கள் சக திமுகவினர்.
இரு தரப்பினரும் ஆறாம் தேதி பதவியேற்புக்கு அழைத்து வரப்பட்ட கவுன்சிலருக்கு ஆள் ஒன்றுக்கு மூன்று ஆள்வீதம் பாதுகாப்புக்கு வந்து, பதவியேற்ற கையோடு காரில் ஏற்றிக்கொண்டு போனதிசை தெரியாமல் பறந்துவிட்டனர். ஒரு கவுன்சிலரை காவல்துறையினர் கைப்பற்றி அவர்கள் ஜீப்பில் ஏற்றி சென்றதும், கட்சிக்காரர்களே தங்களது கவுன்சிலர்களை கடத்தி செல்வதையும் கண்ட வாக்களித்த பொதுமக்களும், திமுகவினரும் முகம்சுளித்தே சென்றனர்.
இந்தநிலையில் எட்டாம்தேதி மாலை நீதிமன்றம் அருகே உள்ள திமுக அலுவலகத்தில் இரு தரப்பையும் மாவட்ட நிர்வாகத்தினர் அழைத்து பேசினர், இருவருமே, தங்களிடம் மெஜாரிட்டி இருப்பதாக மாறி, மாறி கூறியதால் பேச்சுவார்த்தை எட்டப்படவில்லை. மீண்டும் இரவு 7 மணிக்கு அவரவர் ஆதரவாளர்களை அதிரடியாக பாதுகாப்போடு அழைத்துக்கொண்டு சென்று விட்டனர்.
இன்று திமுக மேல்மட்ட பொறுப்பாளர் ஒருவர் தலைமையில், யார் மெஜாரிட்டி காட்டுவது என்கிற மறைமுக தேர்தலை நடத்த உள்ளனர். அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே கட்சி வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை தங்களது மெஜாரிட்டியை காட்டுவதற்காக தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கவுன்சிலர்களை உற்சாக பானத்தில் மிதக்க வைத்துள்ளனர் இரு ஒ.செ.க்களும்.