முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை அனுபவித்து வந்த பேரறிவாளன் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தியது தவறு என கருத்து தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். இதனால் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்பு சட்டப்படி தவறு. 161 வது பிரிவில் ஆளுநர் முடிவெடுக்க தவறினால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகை செய்யும் சட்டப்பிரிவு 142- ஐ பயன்படுத்தி இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளன் விடுதலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஏழு பேர் விடுதலைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களை சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்கவில்லை. அதேநேரத்தில் குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல என்பதை அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாளை போராட்டம் அறிவித்துள்ளது தமிழக காங்கிரஸ் கமிட்டி. நாளை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் அவரவர்களது இடங்களில் வாயை வெள்ளை துணியால் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தவேண்டும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.