சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 9ஆம் தேதி காலை சென்னை வந்தார். சென்னை வந்த அவர் தி.நகரில் உள்ள வீட்டில் தங்கியிருக்கிறார். கடந்த 9ஆம் தேதியிலிருந்து பொதுவெளியில் தோன்றாமல் மௌனம் காத்துவந்த சசிகலா, 15 நாட்கள் கழித்து இன்று ஜெயலலிதா பிறந்த நாளை அவர் தங்கியிருக்கும் வீட்டில் கொண்டாடினார். அதன்பின் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் நெரில் வந்து சசிகலாவைச் சந்தித்தனர்.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோர் ஏற்கனவே சசிகலாவிற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் கருணாஸ் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் சசிகலா மூலமாகத்தான் எம்.எல்.ஏ. ஆனேன் எனத் தெரிவித்திருக்கிறார். அதேபோல், சசிகலா சென்னை வந்ததும் அவரை சந்திக்க நேரமும் கேட்டிருந்தார். ஆனால், சசிகலா விடுதலை ஆவதற்குமுன் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைமுடித்து சென்னை வந்ததால், அவர் சில நாட்களுக்கு யாரையும் சந்திக்கக் கூடாது, தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி அவரும் யாரையும் சந்திக்காமல் இருந்தார். தற்போது பொதுவெளிக்கு வந்திருப்பதும், சரத்குமார் உள்ளிட்டோரை சந்தித்திருப்பதும் அவர் தனது அரசியல் காய்களை நகர்த்த தொடங்கிவிட்டார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், விரைவில் கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோரும் சசிகலாவை சந்திக்க உள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருக்கும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில் சசிகலாவை சந்திக்கவிருப்பதாக வரும் தகவல்கள் அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
மேலும் அதிமுகவில் இருக்கும் மற்ற கூட்டணிக் கட்சியினரும் சசிகலாவை சந்திக்க முனைப்பு காட்டுவதாகத் தெரிகிறது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் தெரிவித்ததாவது, “அதிமுகவை மீட்பேன் எனவும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். எம்.ஜி.ஆர். இறந்தபோது தமிழகத்தில் ‘ஜா’ அணி, ‘ஜெ’ அணி என இருந்தது. அதன்பின் ஜெ அணி மட்டும் நிலைத்தது. அதுபோல் தற்போது அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகள் சீராகி எதிர்காலத்தில் இணைந்துவிட்டால் தங்களது ஒரு சார்பு ஒத்துவராது எனத் தற்போதே இரண்டு பக்கமும் அவர்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.