தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்பத்தூர், ஈரோடு, வேலூர் புதியதாக உருவாக்கப்பட்ட ஆவடி, கும்பகோணம், கடலூர், தாம்பரம் என 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் வேலூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. இதில் மூன்றாம் பாலினத்தவரான கங்கா என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது ஆளும் கட்சியான திமுக.
மூன்றாம் பாலினத்தவர், திருநம்பி, திருநங்கை என அழைக்க அரசாணை வெளியிட்டு அவர்களுக்கு ஓட்டுரிமை, குடும்ப அட்டை போன்றவை கிடைக்க செய்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர். 2009ஆம் ஆண்டு மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பல அரசு சலுகைகளை வழங்கினார். இது அவர்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வேலூர் மாநகராட்சியின் ஓல்டு டவுன் என்கிற பகுதியை உள்ளடக்கிய அடிதட்டு மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் 37வது வார்டில் 49 வயதான கங்கா என்கிற திருநங்கை திமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இது வேலூர் மாநகரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
கங்கா சரவணன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். வேலூர் மாவட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் அமைப்பில் நீண்டகால நிர்வாகியாக இருப்பவர், தற்போது தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் செயலாளராக உள்ளார்.
திமுக சார்பில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தந்திருந்தார். இதனை மா.செ நந்தகுமார், மாநகர செயலாளர் கார்த்தி போன்றோர் பரிசீலனை செய்து பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் மூலமாக திமுக தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தினர். அவரின் ஒப்புதலின்படியே திருநங்கை கங்கா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாநகரம் சத்துவச்சாரி மண்டலத்தில் உள்ள காகிதப்பட்டறை என்கிற பகுதியின் 28வது வார்டில் 22 வயதான மம்தாகுமார் என்கிற இளம்பெண் வேட்பாளராக்கப்பட்டுள்ளார். பகுதி செயலாளர் குமார் என்பவரின் மகளான இவர், வேளாண் இளங்கலை 4 ஆம் ஆண்டு படித்துவருகிறார். இந்த வார்டு பெண்கள் பொது என ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு தன்னால் போட்டியிட முடியாது என்பதால் தன் மகளை களம்மிறக்க நேர்காணலின்போது கூறியுள்ளார். அவர்களும் ஏற்றுக்கொண்டு வேட்பாளராக களம்மிறக்கியுள்ளனர். வெற்றி பெற்றால் வேலூர் மாநகரில் மிக இளம் வயது கவுன்சிலர் என பெயரை பெறுவார்.