ஆன்லைன் சூதாட்ட தடை குறித்தான சட்ட மசோதாவை கடந்த ஆண்டு 19 ஆம் தேதி சட்டப் பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. 4 மாதங்கள் மசோதா கிடப்பில் இருந்த நிலையில், சட்ட மசோதாவை அரசுக்கே மீண்டும் ஆளுநர் திருப்பி அனுப்பினார். மேலும் அதில் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அரசுக்கு அறிவுறுத்தி இருந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து மீண்டும் பேரவையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்கவுள்ளது. இதில், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கக் கோரி திமுக சார்பில், எம்.பி. டி.ஆர். பாலு கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.