
திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு நிறைவு, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மக்களவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக வழிநடத்திச் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என ‘முப்பெரும் விழா’ கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று (15.06.2024) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “தேர்தல் பிரச்சாரத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களைப் பேசினார்கள். தமிழர்கள் குறித்து அவதூறு பரப்பினார்கள். வாட்ஸ் ஆப்பில் பொய்ச் செய்திகளைப் பரப்பினார்கள். இவ்வளவும் செய்தும் பாஜக பெரும்பான்மை பெறவில்லை. இப்போது அவர்கள் பெற்றிருப்பது வெற்றியல்ல தோல்விதான். பாஜகவிற்கு அதிக பெரும்பான்மை இருந்தபோதே, வாதங்களால் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் நமது எம்.பி.க்கள். இப்போது, மக்களுக்கான நமது குரல் நாடாளுமன்றத்தில் இன்னும் வலுவாக ஒலிக்கப் போகிறது. திமுக தொண்டர்களாலும், கூட்டணிக் கட்சிகளாலும் தான் இந்த வெற்றி சாத்தியமானது. திமுக தொண்டர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த வெற்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்களே நாங்களும், தமிழ்நாட்டு மக்களும் உங்கள் தோளில் ஏற்றி வைத்திருக்கும் இந்தக் கடமைகளுக்காக தமிழ்நாட்டு உரிமைகளுக்காக, நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசுங்கள். பலம் பொருந்திய எம்.பி.க்கள் சேர்ந்து, பலவீனமான மைனாரிட்டி பாஜக அரசை பாசிச பாதையில் செல்லாமல் தடுங்கள். ஒற்றுமை உணர்வுடன் கொள்கை திறத்துடன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டும். நம்முடைய உறுப்பினர்கள்தான் பாஜகவைக் கொள்கை, கோட்பாடுகள் ரீதியாக அம்பலப்படுத்தினார்கள். கொள்கை ரீதியாக அவர்களுடைய வகுப்புவாதத்தை, எதேச்சாதிகாரத்தை, பாசிசத்தை விமர்சிக்கின்ற பாணியை இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கி வைத்தவர்கள் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான். சமூகநீதிக்காக இந்திய நாடாளுமன்றத்தில் அதிகமாக உரிமைக்குரல் எழுப்பியது மூலமாக, இந்திய அரசியல் செல்ல வேண்டிய பாதையைத் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டுக் கொடுத்தார்கள்.
எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரதமர் மோடி கட்டமைத்த பிம்பத்தைச் சகோதரர் ராகுல் காந்தி ஒரே ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து குளோஸ் (Close) செய்துவிட்டார். அன்றைக்கு அவர் வழங்கிய இனிப்பு நம்முடைய எதிர்க்கட்சியினரின் கணிப்புகளைப் பொய்யாக்கியது. இந்தியா கூட்டணித் தலைவர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழா இது.

அது எங்க கோட்டை, இது எங்க கோட்டை என்று கனவுக்கோட்டை கட்டியவர்களுக்குத் தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை என்று நாற்பதுக்கு நாற்பது தீர்ப்பின் வழியாகத் தமிழ்நாட்டு மக்கள் உணர்த்தியுள்ளார்கள். அதற்கு நன்றி. 40 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்குச் சென்று என்ன செய்யப்போகிறார்கள் என்று கேட்பவர்களுக்கு சொல்வது. மெஜாரிட்டி பாஜக இருக்கும்போதே நாடாளுமன்றத்துக்குள் முழங்கியவர்கள் மைனாரிட்டி பாஜகவிடமா அடங்கிப் போவார்கள். வெயிட் அண்ட் சி (Wait and See)” எனத் தெரிவித்தார்.