இரு நாட்களுக்கு முன்பு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, ‘’""இரண்டு உள் நாட்டு தடுப்பூசி மருந்து நிறுவனங்களுடன் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா துவக்கியுள்ளது. உலகிலேயே தடுப்பூசியின் விலை இந்தியாவில்தான் மிகக் குறைவு. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்''‘என்றார்.
பிரதமர் மோடி இப்படி அறிவித்த 24 மணி நேரத்திற்குள், தனது தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டின் ஒரு டோஸ் விலையை இரு மடங்காக உயர்த்தி அதிர்ச்சியைத் தந்திருக்கிறது சீரம் நிறுவனம்.
திடீர் விலை உயர்வு குறித்து மருந்துகள் தயாரிப்பு வியாபார உலகில் நாம் விசாரித்தபோது, ’’""இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசி மருத்தை சீரம் நிறுவனமும், கோவேக்சின் தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனமும் தயாரிக்கின்றன. இவற்றுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது மத்திய மோடி அரசு. தடுப்பூசி திட்டத்திற்காக மட்டுமே கிட்டத்தட்ட 35,000 கோடியை ஒதுக்கியிருக்கிறார்கள். மத்திய அரசு மூலமே கொள்முதல் என்ற நிலையை மாற்றி, இனி மாநில அரசுகளே நேரடியாக மருத்து நிறுவனங்களிடம் கொள்முதல் செய்துகொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்த நிலையில்தான் இந்த விலையேற்றம்.
கோவிஷீல்ட் தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் நிறுவனம், மத்திய-மாநில அரசுகளுக்கு இதுவரை ஒரு டோஸ் மருந்தின் விலையை 150 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 250 ரூபாய்க்கும் விற்பனை செய்துவந்தது. இனி மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்றும், மத்திய அரசுக்கு 150 ரூபாய் விலையே தொடரும் என்றும் அறிவித்துவிட்டது சீரம் நிறுவனம். இதனைப் பின்பற்றி தங்கள் தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசியின் விலையை உயர்த்த பாரத் பயோடெக் நிறுவனம் ஆலோசித்து வருகிறது.
ஒரு டோஸ் தடுப்பூசி மருந்தைத் தயாரிக்க அடக்க விலை மற்றும் செலவினங்களை கணக்கிட்டால் 62 ரூபாய் போதும். பொதுச் சந்தையில் 50 சதவீத லாபம் வைத்து விற்றால்கூட 91 ரூபாய்க்கு கொடுக்கமுடியும். ஆனால், இதனை அரசுகளுக்கு 150 ரூபாய்க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு 250 ரூபாய்க்கும் விற்பனை செய்துவந்தனர். இதுவே ஏக லாபம்தான். அப்படியிருந்தும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பாணியில் மருந்துகளை சந்தை பண்ணுவதன் மூலம் பல ஆயிரம் கோடிகளை அள்ள மருந்து நிறுவனங்களுக்கு உதவியுள்ளது மோடி அரசு''‘என்கிறார்கள்.
தடுப்பூசியின் கிடுகிடு விலை உயர்வு, தமிழக அரசையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை தரப்பில் விசாரித்தபோது, ""மத்திய அரசிட மிருந்து இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசியை 150 ரூபாய்க்கு வாங்கி, அரசு மருத்துவமனைகள் மூலம் மக்களுக்கு இலவசமாக போட்டுவருகிறோம். தனியார் மருத்துவமனைகள் 250 ரூபாய்க்கு தடுப்பூசியைப் போடுகின்றன. கடந்த வாரத்தின் கணக்கின்படி இதுவரை 54 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது. இதில் 60 சதவீதம் அரசு மருத்துவமனை களுக்கும், 40 சதவீதம் தனியார் மருத்துவமனைகளுக்கும் பகிர்ந்தளித்திருக்கிறது தமிழக அரசு. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போடப் படுவதால் அதற்கான தொகையை மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்துவிடுகிறது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசுக்கு இது கூடுதல் சுமைதான்.
இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகளுக்கும், மருந்து நிறுவன அதிகாரிகளுக்குமிடையே ஏப்ரல் முதல் வாரத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில், தடுப்பூசிகள் தயாரிப்பதில் தங்க ளுக்கு லாபம் இல்லை என்றும், அதனால் விலையை உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்றும், தடுப்பூசிகள் அதிகம் விற்கப்படுவதற்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் நிறுவனம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அதன்படியே, மே 1 முதல் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அறிவித்ததையடுத்து தடுப்பூசியின் விலையும் உயர்ந்துவிட்டது. இதன்மூலம் தமிழக அரசின் நிதிச்சுமையும் அதிகரித்துள்ளது.
இந்தியா முழுவதும் இதுவரைப் போடப் பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டால் சுமார் 10,000 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்து முடிந் திருக்கிறது. தற்போது விலை உயர்வு இரட்டிப்பாகி யிருப்பதாலும், இனி தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக் கும் என்பதாலும் அதில் நடக்கும் வியாபாரமும் பல மடங்கு அதிகரிக்கும். மே 1 முதல் மாநில அரசே நேரடியாக கொள்முதல் செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து விட்டது. அதனால், மாநில அரசிடம் தேவையான நிதி இருந்தால் மட்டுமே தடுப்பூசிகளை கொள்முதல் செய்யமுடியும். நிதி நெருக் கடியில் தத்தளிக்கும் தமிழக அரசு, இதனை எப்படி சமாளிக்கப்போகிறது என தெரியவில்லை''‘என்கிறார்கள் சுகாதாரத் துறையினர்.
இதற்கிடையே, "மத்தியில் ஆள்பவர்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களின் முதலீடுகளும் தடுப்பூசி தயாரிப்பில் இருப்பதால்தான், விலை உயர்வுக்கு அனுமதியளித்தது மோடி அரசு' என்றும் மருந்துகள் தயாரிப்பு உலகில் சொல்லப்படுகிறது.