மத்திய அரசின் நீட் தேர்வை குறித்து ஆராய தமிழ்நாடு அரசால் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, நீட் தேர்வு குறித்து ஆராயப்பட்டது. அந்தக் குழு அளித்த அறிக்கையின்படி தமிழ்நாடு சட்டமன்றத்தில், ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை சட்டம் 2022’ என்ற புதிய சட்ட முன்வடிவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது. அதன் நகலை இணைத்து 12 மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் ஒன்றினை எழுதி இருந்தார்.
இந்நிலையில் திமுக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., இன்று (6.10.2021), காலை, திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா முதலமைச்சர் அலுவலகத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும், நீட் தேர்வு குறித்து தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் அளித்த பரிந்துரைகளையும் வழங்கினார். இந்தச் சந்திப்பின்போது, தென்காசி தொகுதி கழக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், கேரள மாநில தி.மு.க. அமைப்பாளர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.