Skip to main content

அமைச்சரை விட உங்களுக்கு அண்ணாமலையார் முக்கியமா? -எகிறிய ந.செ.!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020
ttt

 

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, கரோனா பரவலால் மிக எளிமையாக கோயிலுக்குள்ளேயே நடைபெறுகிறது. வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் திருவிழாவை காண வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளுர் பக்தர்களும் அனுமதி பெற்று கோயிலுக்குள் வரச்சொல்லப்பட்டுள்ளது.

 

தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றம் அண்ணாமலையார் கோயிலுக்குள் உள்ள தங்ககொடி மரத்தில் நவம்பர் 20ந் தேதி காலை 5.50 மணிக்கு ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி, எஸ்.பி உட்பட முக்கிய அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் அனைவரும் வந்துவிட்டனர்.

 

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான சேவூர்.ராமச்சந்திரன் கோயிலுக்கு வந்துகொண்டுள்ளார், அதனால் பூஜையை தொடங்குங்கள் எனச் சொல்லப்பட்டதும் சிவாச்சாரியர்கள் மந்திரங்களை ஓத துவங்கினர். சன்நிதானத்துக்குள் இருந்து பஞ்சமூர்த்திகள் கொடிமரம் முன்பு வந்து எழுந்தருளினார். இதற்கே அரை மணி நேரம் கடந்தது. ஆனாலும் அமைச்சர் கோயிலுக்குள் வரவில்லை. கொடியேற்றத்துக்கான மந்திரங்களை, பூஜையை பாதியில் நிறுத்த முடியாது, நிறுத்தினால் ஆன்மீக குத்தம் ஏற்பட்டுவிடும் என்பதால் தீபத்திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. கொடியேற்றி முடித்த 10 நிமிடத்துக்கு பின்னர் அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், தெற்கு மா.செ அக்ரி.கிருஷ்ணமூர்த்தி இருவரும் தங்களது படைபரிவாரங்கள் 50 பேரோடு கோயிலுக்குள் வந்து சேர்ந்தார்.

 

rrr

 

கொடிறே்றப்பட்டுவிட்டது என்பதை அறிந்து அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் அதிருப்தியாகிவிட்டார். திருவண்ணாமலை அதிமுக ந.செ செல்வம், அமைச்சர் வருவதற்கு முன்பு உங்களை யார் கொடியேற்றச் சொன்னது, நான்தான் அமைச்சர் வந்துக்கிட்டு இருக்காருன்னு எத்தனை முறை போன் செய்து சொன்னன். சொல்லியும் கொடியேத்தறிங்கன்னா என்ன அர்த்தம்? இங்க என்ன ஜனாதிபதி ஆட்சியா நடக்குது. 4 மணிக்கு கொடியேத்தறன்னு சொன்னா, 4 மணிக்கெல்லாம் கொடியேற்றிடுவிங்களா? உங்களுக்கு அமைச்சரை விட அண்ணாமலையார் முக்கியமாகிவிட்டாரா? என அனைவர் முன்பும் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் சிவாச்சாரியர்களை சத்தம் போடத் துவங்கினார். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய செய்துவிட்டது. அதிகாரிகள் யாரும் எதுவும் சொல்லவில்லை. பின்னர் கொடிமரம் முன்பு அமைச்சர் உட்பட ஆளும்கட்சியினரை நிற்கவைத்து சுவாமி தரிசனம் செய்ய வைத்தனர் அதிகாரிகள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

 

தீபத்திருவிழாவில் பக்தர்கள், கட்டளைதாரர்கள், உபயதாரர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அப்படியிருக்க தீபத்திருவிழாவின் முதல்நாளான கொடியேற்றத்தின் போது நூற்றுக்கணக்கான முக்கிய பிரமுகர்கள் எப்படி கோயிலுக்குள் வந்தார்கள்? மக்கள் பிரதிநிதிகள் வருவதை கூட ஏற்றுக்கொள்ளலாம். மக்கள் பிரதிநிதியாக இல்லாத நூற்றுக்கும் அதிகமான அதிமுகவினர் எப்படி கோயிலுக்குள் வந்தார்கள். அவர்களை கோயில் நிர்வாகம், காவல்துறை எப்படி அனுமதித்தது. பக்தர்களுக்கு திருவிழா காண அனுமதியில்லை என அறிவித்தார்கள். அப்படியிருக்க முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிமுகவினரான ஆளும்கட்சியினர்க்கு அனுமதி உண்டா என்கிற கேள்வி அண்ணாமலையார் பக்தர்களிடம் எழுந்துள்ளது.

படங்கள்: விவேகானந்தன்

 

 

சார்ந்த செய்திகள்