நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இத்தகைய சூழலில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் பாலகணபதி திருவள்ளூர் அடுத்த மெய்யூர் கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது தேசியக்கொடியை பயன்படுத்தி இருந்தார். அவருடன் பிரச்சாரத்திற்கு அழைத்து வந்த பெண்களின் கைகளில் பா.ஜ.க. கொடியுடன் சேர்த்து தேசிய கொடியும் இடம் பெற்றிருந்தது. இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம் இது தொடர்பாக பா.ஜ.க.வினர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை எழுந்திருந்தது.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய கொடியை பயன்படுத்திய பா.ஜ.க. வேட்பாளர் பாலகணபதி உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் வேளகாபுரம் வருவாய் ஆய்வாளர் பாலாஜி அளித்த புகாரின் பேரில் பாலகணபதி, அக்கட்சியின் மாவட்ட தலைவர் சீனிவாசன், ஒன்றிய தலைவர் சாந்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.