தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தொடங்குங்கள் என்று அதிமுகவினருக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது சமூக வலைதளப் பக்கங்களில் 'மூன்றெழுத்தில் நம் மூச்சு இருக்கும்' என்ற பெயரில் அதிமுகவின் 5 ஆளுமைகளை வரிசைப்டுத்தி பரப்புரையை தொடங்கியிருக்கிறார்.
பேரறிஞர் அண்ணாவை குறிப்பிடும்போது, 'வெறும் பெயரல்ல அண்ணா. அவர் நம் மூன்றெழுத்து மூச்சுக் காற்று'. அவர்தம் நாமம் தாங்கிய ஒரு பேரியக்கத்தின் சாமானிய தொண்டர்கள் நாம்! என்று சொல்லி, 'நம்மில் ஒருவர் நமக்கான முதல்வர்' எடப்பாடியாரின் தலைமையில் கழகத்தின் ஆட்சியை அம்மா வழியில் நிறுவி 2021-ல் மீண்டும் ஒரு சரித்திரம் படைப்போம் என சூளுரைக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
அதேபோல, மக்கள் திலகம் எம்ஜிஆரை குறிப்பிடும்போது, கழகத்தின் உயிர்நாடியாய், மூன்றெழுத்து மூலமந்திரமாய் என்றும் இருப்பவர், நம் மக்கள் திலகம் எம். ஜி. ஆர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிடும்போது, அடுத்து தலைவியாக இருந்து அம்மாவாக மாறிய நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா என்றும் குறிபிட்டுவிட்டு, 'நம்மில் ஒருவர் நமக்கான முதல்வர்' எடப்பாடியாரின் தலைமையில் மீண்டும் அம்மா அவர்களது ஆசி பெற்ற ஆட்சி அமைக்க சூளுரைப்போம் என்று கூறியிருக்கிறார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பற்றி குறிப்பிடுகையில், கழகத்தின் தூணாக, அனைவரையும் ஒற்றுமையுடன் வழிநடத்துபவர் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் ஓபிஎஸ் எனவும், இதயதெய்வம் வழியில் கழக ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதலில் எடப்பாடியாரின் தலைமையில் 2021 தேர்தல் களத்தையும் வென்றெடுத்து மீண்டும் அம்மா ஆட்சி அமைக்க சூளுரைப்போம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் வேலுமணி.
அதேபோல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி குறிப்பிடும்போது, 2021 தேர்தலிலும் குமரி முதல் கோட்டை வரை அதிமுகவின் எஃகுகோட்டை என்பதை மெய்ப்பிப்போம் என்றும், அம்மா வழியில் மக்கள் சேவையாற்றி, நம்மில் ஒருவர் நமக்கான முதல்வர் எடப்பாடியாரின் தலைமையில் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மீண்டும் அணிவகுப்போம் என்றும் அமைச்சர் எஸ்பி.வேலுமணி தெரிவித்து இருக்கிறார்.
அ.தி.மு.க.வின் மூன்றெழுத்து மூச்சாகவும், மூன்றெழுத்து மந்திரங்களாகவும். திலகங்களாகவும் திகழும் அண்ணா, எம்.ஜி.ஆர். , அம்மா, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என வரிசைப்படுத்தி அவர்களின் புகழை உயர்த்தும் வகையில் அமைச்சர் வேலுமணி தமது சமூக வலைதளப்பக்கங்களில் பரப்புரை மேற்கொண்டு வருவது அதிமுகவினர் மட்டுமின்றி மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்களின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.