மகாராஷ்டிரா மாநிலத்தில், பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அம்மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அம்மாநிலத்தில் வரும் நவம்பர் 20ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும், நவம்பர் 23ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்றன. மேலும், இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடு களமிறங்கவுள்ளது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து இந்த தேர்தலை சந்திக்கவுள்ளது.
அந்த வகையில், தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். தொல்.திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘நவம்பர் 20ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிற 10 தொகுதிகளின் பட்டியலை இன்று அவுரங்காபாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தேன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளிலும் ராஷ்ட்ரிய ஜனதா தல் கட்சி 10 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து மஹாரஸ்டிரா சட்டமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.