தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து, திமுக அதிக பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று இன்று (07.05.2021) திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அவர் முதலமைச்சராகவும் 34 துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும் ஆளுநர் பன்வாரிலால் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இதில், முதல்முறையாக 15 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 1967 முதல் 2011வரை சுமார் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்தத் தொகுதியில் இருந்து சட்டசபையில் இடம்பெற்றிருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 2016இல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார். மீண்டும் இந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அவர் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றுள்ளார்.
இந்நிலையில், அவர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். திருவெறும்பூர் தொகுதியிலிருந்து முதல்முறையாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.