நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர். அவருக்காக திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தற்போது அவர், நான்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக திருநாவுக்கரசர் பிரசாரம் செய்து பேசுகையில்,
நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 120 முதல் 150 இடங்களுக்கு மேல் தலைகீழாக நின்றாலும் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியாது. மோடியால் மீண்டும் பிரதமராக முடியாது. இந்தியாவில் ஆட்சி மாற்றம் உறுதி. காங்கிரஸ் தோழமை கட்சிகளோடு ராகுல்காந்தி பிரதமராவது உறுதியாகிவிட்டது.
அ.தி.மு.க. ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றொரு அணியாகவும் வந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் முதல்-அமைச்சராக ஜெயலலிதா 5 ஆண்டும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆட்சி 3 ஆண்டுமாக கடந்த 8 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி நடந்த போதிலும் மக்களுக்கு ஒரு நன்மையும் நடக்கவில்லை. இனி 2 ஆண்டுகளில் அவர்கள் மக்களுக்கு என்ன நன்மை செய்துவிடப் போகிறார்கள். அ.தி.மு.க.வின் மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
காங்கிரஸ் தோழமை கட்சிகளோடு ராகுல்காந்தி பிரதமராவது உறுதியாகிவிட்டது. அதேபோல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். வருகிற 23-ந்தேதிக்கு பிறகு தி.மு.க. ஆட்சி அமைந்தாலும், அதை கலைத்துவிட்டு மக்கள் முன் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். இனி ஒருபோதும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஊழல் ஆட்சிக்கு மக்கள் துணை போக மாட்டார்கள் என்றார்.